ராம அவதாரத்தில் ராமனுக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான் குரங்கு உருவம் எடுத்து வாயு புத்திரன் அனுமனாக அவதரித்ததாக ராமாயணப் புராணக்கதையில் கூறப்பட்டுள்ளது. அனுமன் பிறந்த இந்த நாளே "அனுமன் ஜெயந்தி" என்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று டிசம்பர் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அன்றுதான் அனைத்து அனுமன் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், அனுமன் பிறந்தநாளன்று அவருக்கு விரதம் இருந்து அவரை வணங்கினால், அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும் என்பது ஐதீகம். 




திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராமநவமி, அனுமன் ஜெயந்தி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று (23-ந்தேதி, வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு 10-வது ஆண்டாக 1 லட்சத்து 8 வடை மாலை சாற்றுதல் விழா மற்றும் 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. .இந்த விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதன் பின்னர் வடை மாலை மற்றும் ஜாங்கிரி மாலைகள் சாற்றுதல் விழா காலை 7 மணிக்கு நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மேல் ஆஞ்சநேய சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த வடை மாலை மற்றும் ஜாங்கிரி மாலை சாற்றுதல் விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரங்களை முன்பதிவு செய்து கொண்டனர். இங்கு வடை மாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரூ.75 முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜாங்கிரி மாலைக்கு ரூ.375-லிருந்து ரூ.15,000 வரை அதன் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.




இந்த நிகழ்வை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். விழாவில்  பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். குறிப்பாக  உள்ளூர், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து சென்றனர். மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுதாகர், தக்கார் சுந்தரி, கோவில் அர்ச்சகர் வரதராஜன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.