தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 29வது துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட சார்பாக தென்னூர் பகுதியில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட புதிய வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ஃபைஸ்அகமது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா மமக செயலாளர் இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில அணிகளின் துணை செயலாளர்கள் முகமது ரபீக், பிரேம் நசீர், அப்பீஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் தர்கா அப்துல் சமது, ஹுமாயூன் கபீர் , அப்துல் ரஹ்மான், மமக மாவட்ட துணைச் செயலாளர்கள் இம்ரான், அசாருதீன், அப்துல் சமதுமற்றும் அணிகளின் செயலாளர்கள் மற்றும் பகுதி, வார்டு கிளை கழக  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்சமது பேசியதாவது: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 95ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இழந்த உரிமைகளை மீட்பதற்காகவும் இருக்கின்ற உரிமைகளை தக்க வைப்பதற்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது. முஸ்லிம் சமுதாயத்திற்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார். இந்த இயக்கத்தின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.




மேலும் எல்லா சமூக மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும், சமூக சேவை உருவாக்க வேண்டும், வெறுப்பு அரசியலை பரப்பிக் கொண்டிருக்கும் இந்த கட்டத்தில் அன்பையும், கருணையும் பரப்பக்கூடிய வகையில் பல வகை சிறப்பு பணிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு 17லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது முக்கியமான திட்டமாகும். நீட் தேர்வு என்பது மிக மோசமான கிராமப்புற ஏழை எளிய மாணவிகளுக்கு மருத்துவக் கனவுகளை மண்ணை போட்டுக் கொண்டிருக்கிற மோசமான தேர்வு. பணம் உள்ளவர்கள் எப்படியாவது படிக்க வைக்க முடியும். ஏழை மாணவர்கள் எவ்வளவு அதிக மார்க் எடுத்தாலும் மருத்துவக் கல்வி படிக்க முடியாது. நீட் ரத்து செய்ய  தமிழ்நாடு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருப்பது என்பது கண்டனத்திற்குரியது.  ஒன்றிய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு  விலக்கு அளிப்பது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து நீட் தேர்வு அப்புறப்படுத்த வேண்டும்.  




தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்திற்கு தலைவராக முன்னாள் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு நியமிக்க கூடாது என திருப்பி அனுப்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஆளுநர் ஆர்..என் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.  மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய கைதிகள் சிறையில் உள்ளனர் அவர்களை கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அவர்களை விடுதலை செய்ய எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தற்பொழுது விடுதலை செய்வதற்காக அதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்வதற்காக நீதி அரசர் ஆதிநாதன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்ய செயல்பட்டு வருகிறது. எனவே தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்து சாத்தியப்படுத்தி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.