திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு படை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தீயணைப்பு படை வீரர்கள் அவசர தேவைக்கு பயன்படுத்தக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் வசதி உள்ளது. இந்த மண்டலத்துக்கு உட்பட்ட தீயணைப்பு நிலையங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்து விட்டால் காலி சிலிண்டர்களை கொண்டு வந்து இங்கு நிரப்பிச் செல்வார்கள். வழக்கம்போல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் நிலைய அலுவலர் சரவணன் முன்னிலையில் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 27) என்ற தீயணைப்பு படை வீரர் காலி சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் நிரப்பும் பணியில் ஈடுபட்டு இருந்தார். 


 






 


இதனை தொடர்ந்து அப்போது எதிர்பாராத விதமாக கூடுதல் அழுத்தத்தால் அந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த தீயணைப்பு வீரரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக தீயணைப்பு படை வீரர்கள் அவரை மீட்டு அருகாமையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




இந்த சிலிண்டர் வெடிப்பு சத்தம் அருகாமையில் உள்ள கோர்ட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என கருதி ஓட்டம் பிடித்தனர். விபத்து தொடர்பாக செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு மண்டல அலுவலகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.