திருச்சி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் இன்று  திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுகவின் மாநாட்டில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களையும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் , அநாகரிகமான முறையில் பேசியும் பாட்டுப்பாடியும் கொலை மிரட்டல் விடுத்தும் உல்ளனர். இதே போல் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களை பெண் என்று கூட பாராமல் அவரை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக அவமானப்படுத்தும் விதமாகவும் அவரைப் பற்றி ஆபாசமும், அவதூறாகவும் பேசி பாடல் பாடினர். இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கண்டு ரசித்து கைத்தட்டி சிரித்தனர்.  இந்த செயல் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் அனைத்து தலைவர்கள் மற்றும் தற்போதைய அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடுகளானது தனிமனித சுதந்திரத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் மற்றும் உண்மைக்கு மாறான தனிப்பட்ட முறையில் ஆபாசமாகவும் , அவதூராகவும் , அநாகரிகமாகவும் நடந்துக்கொண்டனர்.




மேலும்  பெண்மை கேவலப்படுத்தும் விதமாகவும்,  நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி பொது அமைதிக்கு கலகம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்பட்டுள்ளனர். எனவே அவதூறு பரப்பி பாடல் பாடிய நபரையும் அதனை கேட்டு ரசித்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் காமினியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் துர்கா தேவி, சுகுணா முத்துராஜ், பூர்ணிமா, மற்றும் நிர்வாகிகள் சித்ரா ஜெயலக்ஷ்மி ராஜேஸ்வரி சரண்யா உள்ளிட்ட மகளிர் அணியினர் உடன் இருந்தனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக திருச்சி மத்திய மாவட்ட அமைப்பாளர் கவிதா பேசியது.. ஒரு பெண் என்று பாராமல் மிகவும் மோசமாக பேசியுள்ளர். இந்த சூழ்நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் நடத்த நாங்கள் தயராக உள்ளோம். யாராக இருந்தாலும் பெண் பற்றி ஆபாசமாக பேசுவது, பாடல் பாடுவது தவறு. ஆனால் அதிமுகவினர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகையால் இதனை கண்டித்தும், எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளோம். இந்த நிலை நீடித்தால் மகளிர் அணி போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்தார்.