தஞ்சாவூர்: பல ஆண்டுகளாக குற்றவாளி யார் என்று தெரியாத சூழ்நிலையில் இருந்து வந்த அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியை நெருங்கியுள்ளார் டி.ஐ.ஜி. வருண்குமார். மேலும் விசாரணை போக்கு கடுமையான கிடுக்கிப்பிடியாக மாறி உள்ளது.
கடத்தி கொடூரமாக கொல்லப்பட்ட ராமஜெயம்
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம். இவர் கடந்த 29.3.2012 இல் திருச்சி தில்லை நகரில் காலை வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது ஒரு கும்பர் இவரை காரில் கடத்திச் சென்று, திருச்சி கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச்சோலை என்ற இடத்தில் கொடூரமாக கொலை செய்து வீசியெறிந்துவிட்டு சென்று விட்டது. ராமஜெயத்தின் கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்தன. உடல் முழுதும் இரும்பு கம்பியால் சுற்றப்பட்டு இருந்தது. இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
13 ஆண்டுகளாகியும் விடை தெரியாத நிலை
இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது. பல ஆண்டுகளாகியும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆன போதிலும், கொலையாளிகள் யார்? திருச்சியில் மிக முக்கியமான பிரபலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த ராமஜெயம் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தெரியாத நிலையே இருந்து வந்தது.
பல்வேறு சர்ச்சைகளையும் பல்வேறு சந்தேகங்களையும் தற்போது வரை கிளப்பிக் கொண்டிருக்கும் ராமஜெயம் கொலை வழக்கின் குற்றவாளிகளை கண்டறிவதிலும், கொலைக்கான பின்னணி குறித்தும் கடந்த 13 ஆண்டுகளாக போலீசார் தீவிர விசாரணை செய்தும் வழக்கில் துப்பு துலக்க முடியாமல் இருந்து வந்தது.
ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு
இந்த நிலையில் தான், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்து அதன் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி எஸ்.பி.,ஆக இருந்த ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனாலும் வழக்கு தொய்வை தவிர வேறொன்றையும் சந்திக்கவில்லை.
தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பாக விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார், தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
உறங்கிக் கொண்டிருந்த வழக்குக்கு உயிர் வந்தது
திருச்சி டி.ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த வருண் குமார், சென்னையில் சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இந்த நிலையில் தான் உறங்கிக் கொண்டிருந்த ராமஜெயம் கொலை வழக்கை மீண்டும் தூசி தட்ட ஆரம்பித்துள்ளார் சிபிசிஐடி டி.ஐ.ஜி வருண்குமார். ராமஜெயம் கொலை குறித்து, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி சுடலைமுத்துவிடம், டிஐஜி வருண்குமார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளார்.
விசாரணையில் திடீர் திருப்பம்
அதன் அடிப்படையில், சுடலைமுத்துவின் கூட்டாளியான திருச்சி மண்ணச்சநல்லுாரைச் சேர்ந்த ரவுடி குணா என்பவரிடம், நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார். இதனால் விசாரணையின் போக்கு வேகம் பிடித்துள்ளது. திருச்சியில் ரவுடிகள் பிச்சமுத்து, முட்டை ரவி, மணல்மேடு சங்கர் ஆகியோரின் ஆதிக்கமும், அட்டூழியம் உச்சத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில் களத்தில் இறங்கிய போலீசார் 'என்கவுன்டர்' நடத்தினர். இதில் முட்டை ரவி கொல்லப்பட்டார். இவரது மூளையாக செயல்பட்டவர் ரவுடி குணசீலன் என்ற குணா. இலங்கை தமிழரான இவர், மண்ணச்சநல்லுார் குணா என அழைக்கப்படுகிறார்.
மட்டக்களப்பு பகுதியில் நடக்கும் பாணியில் கொலை
தன் குருவான முட்டை ரவி என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் தான் காரணம் என குணா கருதினார். இதனால், ராமஜெயத்தை கொல்லாமல் விடமாட்டேன் என சபதம் எடுத்து செயல்பட்டு வந்ததாக தெரிய வந்துள்ளது.
குணாவின் வலது கரமாக செயல்பட்டவர்தான், திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த ரவுடி சுந்தரபாண்டியன். இந்த குரூப்தான் புல்லட் மனோகர் என்பவரை கொலை செய்தது. இந்த கொலை பாணியிலேயேதான் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதமும் இருந்தது.
விசாரணையில் திடீர் திருப்பங்கள்
மேலும், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதம், இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் நடப்பது போலவே இருந்தது. இதை துல்லியமாக கணித்துள்ளார் டிஐஜி வருண்குமார். ராமஜெயம் கொலையில் இலங்கையைச் சேர்ந்தவர் பின்னணியில் இருப்பதாக டி.ஐ.ஜி. வருண்குமார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்துதான் பின்னணியை ஆராய்ந்த போது டிஐஜி வருண்குமாரின் கழுகு பார்வையில் சிக்கியுள்ளான் குணா.
இதையடுத்து முட்டை ரவி என்கவுன்டர்தான் ராமஜெயத்தின் கொலைக்கு வலுவான பின்னணியாக இருக்க வேண்டும் என்று டிஐஜி வருண்குமார் முடிவுக்கு வந்துள்ளார். குணா, சுந்தரபாண்டியன், சுடலைமுத்து ஆகியோர் தான் ராமஜெயத்தை கொலை செய்து இருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தின் தடத்தை பிடித்து விசாரணையை தொடக்கி உள்ளார் டி.ஐ.ஜி. வருண்குமார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை வளையத்தில் 13 ரவுடிகள்
இதையடுத்து விசாரணை வளையத்தில், 13 ரவுடிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ராமஜெயம் வாயில் நுணி ஒன்றும் திணிக்கப்பட்டு இருந்தது. இது காரில் தொங்க விடப்பட்டு இருந்த திரைச்சீலை என்பதும் உறுதியாகி உள்ளது. இதனால் டிஐஜி வருண்குமாரின் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது என்று சிறப்பு விசாரணைக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.