இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று  சில தினங்களாக மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் சென்னை ஐ.ஐ.டி.யில் 30 மேற்படோர்களுக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை மீண்டும் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கனடாவில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு வந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ராமலிங்க நகரை சேர்ந்த 3 பேர் கடந்த 12ஆம் தேதி கனடா நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் மறுநாள் கும்பகோணத்தில் உள்ள உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.




அதன் பின்னர் திருச்சி திரும்பிய அவர்கள் கடந்த 15ஆம் தேதி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறையெடுத்து தங்கினர். அதைதொடர்ந்து 19ஆம் தேதி கொரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தியுள்ளனர். இதில் குழந்தை உள்பட 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டலில் கிருமிநாசி மூலம் சுத்தப்படுத்தினர். பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் லேசான நோய் அறிகுறி மட்டுமே இருந்த காரணத்தால் ராமலிங்க நகரில் உள்ள உறவினர் வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளனர். இதுபற்றி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறும்போது, திருச்சி மாநகர மக்கள் அச்சப்பட தேவையில்லை. நாங்கள் 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக தினமும் கொரோனா பரிசோதனைக்கு ரத்த, சளி மாதிரிகள் சேகரித்து வருகிறோம். நேற்றைய தினம் கூட  திருச்சியில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றனர்.




இதனை தொடர்ந்து  வட மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் இருப்பதால் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். இப்போது பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதில்லை. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நோய் தொற்றில் இருந்து தங்களை தங்களையும், சமூகத்தையும் பாதுகாக்க உதவிட வேண்டும் என்றனர்.குறிப்பாக பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருநாசினியை கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, கூட்டம் கூடுவதை தவிர்பது, போன்ற அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.