திருச்சி புத்தூர் நால்ரோட்டில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நடன கேளிக்கை விடுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனுமதியை ரத்து செய்ய கோரியும், தமிழக அரசை கண்டித்தும் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் புத்தூர் நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். அப்போது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என்றும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்றும் கூறினர். இதையடுத்து பா.ஜ.க.வினர் புத்தூர் நால்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் இழுத்து சென்று கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். இதனால் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளு முள்ளாக மாறியது. அப்போது காவல்துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் பா.ஜ.க.வினர் கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் பெண்கள் உள்பட 61 பேர் கைது செய்யப்பட்டனர்.




இதற்கிடையே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக விமர்சித்ததாக கூறி தி.மு.க. வட்ட செயலாளர் பவுல்ராஜ் தலைமையில் அரசு மருத்துவமனை அருகே தி.மு.க.வினரும் திரண்டனர். அவர்கள் பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தி.மு.க.வினர் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து சென்றனர். இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக கூடுதல், கலகம் செய்வதற்கு தூண்டிவிடுதல், முறையற்று தடுத்தல், வாட்ஸ் அப், முகநூல் போன்ற ஊடகத்தின் வழியாக வதந்திகளை பரப்புதல், அதன்மூலம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் பா.ஜ.க.வினர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்பட 9 பேரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் புத்தூர் பகுதியில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 




இதற்கிைடயே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பா.ஜ.க.வினர் தங்க வைக்கப்பட்டு இருந்த மண்டபத்துக்கு நேற்று இரவு வருகை தந்தார். இதனால் மண்டபத்துக்கு வெளியே ஏராளமான பா.ஜ.க.வினர் திரண்டு இருந்தனர். பின்னர், கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறுகையில், "மாணவர்கள் நலனுக்காக பா.ஜ.க. தெருவில் இறங்கி போராடி வருகிறது. போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பிய லட்சுமிநாராயணன் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கல்லூரியின் அருகே மதுக்கூடத்துடன் நடனமாடும் விடுதியை திறக்க ஆளும் கட்சி ஆதரவாளர்கள் துடிக்கின்றனர். அவ்வாறு அமைந்தால் மாணவர்கள் நலன் நிச்சயம் பாதிக்கப்படும். ஆனால் இந்த விவகாரத்தில் போலீசார், மதுக்கூடம் திறப்பதை தடுப்பதை விட்டு, ஒருதலைபட்சமாக செயல்பட்டு பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்தது" என்றார்.