கர்ம வீரர் காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்த போது மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்க இந்த திட்டம் முக்கிய பங்காற்றியது. இதையடுத்து எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழ் நாட்டின் முலமைச்சர் ஆன போது இந்த மதிய உணவு திட்டம் தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், காலை உணவாக உப்புமா, கிச்சடி உள்ளிட்ட பல்வேறு வகை சிற்றுண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.




இந்நிலையில் நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றி விழாவில் பேசிய முதலமைச்சர், அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில், கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் இளம் பெண்களுக்கு 100 கோடி ரூபாய் உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், சுமார் 2 லட்சத்து பதினோராயிரம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு சுமார் 350 கோடி ரூபாய் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும்  வரும் கல்வி ஆண்டு முதல், 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி (இன்று) முதல் மாநில முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார். இதற்கென இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் கடத்தாண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று,  1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 513 மாணவ, மாணவிகள் பயனடைந்து வந்தனர். தற்போது தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அரியலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 479 அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 26 ஆயிரத்து 407 மாணவ,மாணவிகளுக்கு செயல்படுத்தபட்டது.