மேலும் திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள், லால்குடி நகராட்சியில் 24, முசிறி நகராட்சியில் 24, மணப்பாறை நகராட்சியில் 27, துறையூர் நகராட்சியில் 24, துவாக்குடி நகராட்சியில் 21 வார்டுகள் என்று 5 நகராட்சிகளில் 120 வார்டுகள் உள்ளன. இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், எஸ்.கண்ணணூர், சிறுகமணி, தாத்தையங்கார் பேட்டை, தொட்டியம், உப்பிலியாபுரம் ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள், கூத்தப்பர், மண்ணச்சநல்லூர் பேரூராட்சிகளில் தலா 18 வார்டுகள் என்று மொத்தம் 14 பேரூராட்சிகளில் 216 வார்டுகள் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 20 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 401 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு, பொன்லை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்கள் என்று 4 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி நகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தப்பார், மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், எஸ்.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியாபுரம் ஆகிய 14 பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் அந்தந்த அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிவராசு தெரிவித்துள்ளார். மேலும் வேட்பு மனு தாக்கல் படிவங்களை இணைதளத்திலும், அந்தந்த அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வேட்பு மனுவினை தாக்கல் செய்பவர் மற்றும் முன்மொழிபவர் என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இரு வாகனங்களுக்கு மேல் அனுமதி இல்லை. தேர்தல் ஆணையத்தின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும், கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களையும், வேட்பாளர்கள் பின்பற்றிட வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல்அலுவலரும், மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.