இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி அரியலூர் தொகுதியில் 1,26,712 ஆண் வாக்காளர்களும், 1,26,632 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 1,25,898 ஆண் வாக்காளர்களும், 1,26,819 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்களும் என அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 5,06,071 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்னர் கடந்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,28,651 ஆண் வாக்காளர்களும், 1,28,797 பெண் வாக்காளர்களும், இதரர் 6 வாக்காளர்களும் என மொத்தம் 2,57,454 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,28,040 ஆண் வாக்காளர்களும், 1,29,235 பெண் வாக்காளர்களும், இதரர் 9 வாக்காளர்களும் என மொத்தம் 2,57,284 வாக்காளர்கள் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,14,738 வாக்காளர்கள் உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை விட இறுதி வாக்காளர் பட்டியலில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 4,105 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 4,562 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். 2 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். அரியலூர் தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட 146 பெண் வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட 1,195 பெண் வாக்காளர்களும் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்