திருச்சியில் திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்துகொண்ட திருச்சி சிவா எம்.பி, நீட் தேர்வில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என தெரிவித்தார்.


இதுதொடர்பாக பேசிய அவர், “மருத்துவபடிப்பு MBBS, BDS மற்றும் முதுநிலை படிப்புக்கான நுழைவு தேர்வு என்ற பெயரில் நீட் தேர்வை கொண்டுவந்து மாணவர்களின் மருத்துவ கனவை நசுக்குகின்றது. ஆகையால் நீட் தேர்வை எதிர்த்து  தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இனங்க இளைஞர் அணி, மாணவர் அணி மருத்துவர் அணி, ஒன்றாக இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும், என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அதன் கோப்புகளை தமிழக ஆளுநர் ரவி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோப்புகளை அவர் நிராகரித்தார்.  நீட் தேர்வு என்பது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்ற கனவை எட்டா கனியாக ஆக்கிவிட்டது.  மேலும் ஒன்றிய அரசு கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்களுக்கு அனுபவம் இல்லாத  கல்வி முறையில் நீட் தேர்வு நடத்தப்படுவதால், அவருடைய மருத்துவ படிப்பு கனவு  நிராகரிக்கப்படுகிறது.  நீட் தேர்வுக்காக தற்போது இந்தியாவில் பல தனியார் கோச்சிங் சென்டர் உருவாகி உள்ளது.




மேலும், பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று,  எளிதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பை தொடர்கிறார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு நசுக்கப்படுகிறது.  தொடர்ந்து திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு எதிராக நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, வாக்கெடுப்பு நடக்கும் போது அதற்கு ஆதரவு தெரிவிக்காமல் வெளிய எடுப்பு செய்து அதிமுக பச்சை துரோகம் செய்தது.  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பேசுவதும், நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக நடந்து கொள்வதும் என அதிமுக இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது. விரைவில் இந்திய கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு தமிழ்நாடு நிச்சயம் நீட் தேர்வில் விதிவிலக்கு பெரும் என தமிழ்நாடு முதலமைச்சர் கூறியிருக்கிறார். 




தொடர்ந்து நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை தடுக்கவும் ,மக்கள் மத்தியில் விழிப்புணர் ஏற்படுத்த, தமிழ்நாடு முழுவதும் இந்த உண்ணாவிரத போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்தப் போராட்டம் ஒரு தொடக்கமே விரைவில் நாங்கள் வெற்றியை பெறுவோம் . தமிழ்நாடு நீட் தேர்வில் இருந்து விலக்கு நிச்சயம் பெறும். திமுக தொடர்ந்து நீட்டுக்கு எதிராக போராடிக் கொண்டு தான் வருகிறது. அதே போன்று திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்ததை,  நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. நீட் தேர்வை பொருத்தவரை மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு உடன்படாத காரணத்தினால் தான் இன்றளவு இழுத்து அடிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் நீட்  இல்லாத சூழ்நிலை உருவாகும்”  எனத் தெரிவித்தார்.