திருச்சியில் இன்று ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் மாநாடு நடக்கவுள்ள மைதானத்தை சுற்றி கொடிகள் நடப்பட்டுள்ளன. அந்த கொடிகள் கறுப்பு, சிகப்பு நிறத்தில், நடுவே அண்ணாதுரை மற்றும் இரட்டை இலை சின்னம் இருப்பது போல் உள்ளது. இது அ.தி.மு.க.வை ஞாபகப்படுத்தும் கொடி என்றாலும், தேர்தல் கமிஷனால் அ.தி.மு.க.வுக்கு அங்கீகரிக்கப்பட்ட கொடி அல்ல. அங்கீகரிக்கப்பட்ட கொடி என்பது, கறுப்பு, சிகப்பு நிறுத்தில், கொடியின் நடுவே அண்ணாதுரை படம் இருக்கும். மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்தும் கொடி, அ.தி.மு.க., கொடி போல் தோற்றம் இருந்தாலும், அதிகாரப்பூர்வ அ.தி.மு.க.வின் கொடி என்று கூறமுடியாது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க.வினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட கொடியை பயன்படுத்தாமல், அதேநேரம் அ.தி.மு.க. கொடி என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய கொடியை பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்பட்டது.மேலும் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை வந்தால், நாங்கள் அ.தி.மு.க.வின் அங்கீகரிக்கப்பட்ட கொடியை பயன்படுத்தவில்லை என்று கூறுவதற்காக இப்படி செய்கிறார்கள் என்று அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டினர்.
ஆனால், தற்போது திருச்சி மாநாட்டு திடலில் கட்டப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் இடம்பெற்றுள்ள கொடி முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா இருக்கும்போதே அ.தி.மு.க.வினர் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் பயன்படுத்தி வந்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது.. புரட்சித் தலைவர் உருவாக்கிய இந்த கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் சொந்தமாகவில்லை. சின்னம் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் அதிமுக கொடியில் விருப்பப்பட்டவர்கள் இரட்டை இலை சின்னத்தை வைப்பார்கள் அந்த அடிப்படையில் நாங்களும் வைத்திருக்கின்றோம். சட்ட சிக்கலுக்கு பயந்து வைக்கவில்லை. இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு இன்னமும் நிரந்தரமாக உறுதியாகவில்லை. கட்சி கொடி, கட்சியின் பெயர் எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறோம். பயன்படுத்துவோம். வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அதிமுகவே உண்மையானது என தெரிவித்தார். ஆனால் மாநாட்டு திடலில் கட்டப்பட்டுள்ளது அ.தி.மு.க. கொடியா? புதிய கொடியா? தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் புதிய அறிவிப்பு வெளியாகுமோ என தொடண்டர்களிடையே கேள்வி எழும்பியுள்ளது.