நாம் தமிழர் கட்சியின்  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மேலும், இன்று மாலை 'வென்றாக வேண்டும் தமிழ்' என்ற தலைப்பில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் பொதுக்கூட்டம், திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.  இதில் பங்கேற்க வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என திட்டவட்டமாக கூறுகிறது. இந்நிலையில் திமுக அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை உடனடியாக திறந்து விடவேண்டும், நான் தேர்தலில் தொகுதி பங்கீடு தருகிறேன், இல்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேபோ என்று சொல்ல வேண்டும். இதைவிட்டுவிட்டு விவசாயிகளை சந்திப்பது, மீனவர்களை சந்திப்பது, நீட் தேர்வு எதிர்த்து போராட்டம் நடத்துவது என்று இருக்கிறார்கள். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேர்தல் வருவதால் திமுக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆகையால் முதல்வர் மு.க.ஸ்டாலின் , விவசாயிகளை சந்திக்க தயங்குகிறார். மக்கள் எப்படி போனாலும் பரவா இல்லை, திமுகவிற்கு காங்கிரஸ் உடன் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக இல்லை” என்றார். 




மேலும்,  அதிமுகவின் மாநாடு ஏதாவது மாற்றத்தை கொண்டுவந்துள்ளதா? என்ற கேள்விக்கு., அது அக்கட்சியினரை உற்சாகப்படுத்தவும்,  கட்சி எடப்பாடி பக்கம் வந்து விட்டது என்பதை காட்டுவதற்கும் அந்த மாநாடு பயன்பட்டுள்ளது. அது அக்கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்கான மாநாடு. அது வேறு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. தமிழ்நாட்டில் புரட்சித் தமிழன் அண்ணன் நடிகர் சத்யராஜ் மட்டும் தான். மரியாதை நிமித்தமாக 'ர்' சேர்த்து எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் என பட்டம் கொடுத்துள்ளனர். தமிழர்களிடம் புரட்சி என்கின்ற சொல் மிகவும் கேவலப்பட்டு விட்டது. எடப்பாடிக்கு பட்டம் கொடுத்திருக்கிறார்கள். நாமும் அவரை வாழ்த்துவோம். நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுமா? என்ற கேள்விக்கு, உங்கள் கொள்கையோடு ஒத்துப் போகிறோம் என்று யாராவது எங்களிடம் வரட்டும். அப்பொழுது கூட்டணியை பற்றி பேசி முடிவெடுப்போம்.




முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் பாதுகாப்பு இல்லை. கொடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக 6 பேர் கொலைகள் நடந்துள்ளன. அதனை ஏன் இன்னும் கண்டுபிடித்து வெளியே கொண்டு வரவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை கர்நாடகாக்காரன் என்று பெருமையோடு பேசியுள்ளார். அவர் அந்த மாநிலத்திற்கு தலைவராக போகட்டும். நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி தான் கொண்டு வந்தது. அது பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் என்பதை கணித்து அதனை அன்றே தடுத்து இருக்க வேண்டும். மேலும் மருத்துவம் தான் கல்வி என்று மாணவர்களின் மனதில் பதிய வைப்பது தவறு. கல்வியில் மருத்துவமும் ஒன்று என மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மருத்துவம் படித்த தமிழர்கள் உலகம் முழுவதும் மருத்துவத் துறையில் மேதைகளாக உள்ளனர், அவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதாமல் வந்தவர்கள் என கூறினார்