தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அனைத்து மாநகராட்சிகள்,  நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான  தேர்தல்கள் குறித்த அறிவிப்பை கடந்த 26 ஆம் தேதி வெளியிட்டது.  இதன்படி திருச்சி மாவட் டத்தில், திருச்சி மாநகராட்சி, மணப்பாறை,   துவாக்குடி, துறையூர்,  லால்குடி,  முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர்,  கூத்தைப்பார்,  மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர், ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.


இதனை தொடர்ந்து இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் சிவராசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது.. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 20 தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  53 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 5 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகள் என  401 வார்டுகளில் 1, 262 வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10,58,674 பேர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 512632 பேர்களும் , பெண்கள் 545867 பேர்களும், மூன்றாம் பாலினம் 175 பேர்களும் உள்ளனர்.




மேலும் 1105 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் பதட்டம் நிறைந்த 157 வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.  குறிப்பாக வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு மேலும் பதட்டமான வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார். இந்த வாக்குசாவடி மையங்களை கண்காணிக்க  நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப்கேமராகள் பொருத்தப்பட உள்ளது. முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்வதை மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படுகிறது என்றார். மேலும் தேர்தல் பணிகளுக்காக 5796 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி நடைபெற உள்ளது. இவர்களுக்கான பயிற்சி 21 மையங்களில் நடத்தப்படவுள்ளது. தேர்தல் பணிகளை கண்காணிக்கும் பொருட்டு 20 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு பொருட்களைக் கொண்டு செல்வதற்காக 97 மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.




திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை வாக்குப்பதிவிற்கு  தேவையான 1518 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 11 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார். கொரோனா  நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குறிப்பாக வேட்பாளர்கள் வாகனங்களில் சென்று வீதி வீதியாக பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் தேர்தல் ஆணையத்தின் விதிகளை பின்பற்றி வேட்பாளர்கள் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும், முக்கியமாக  பிரச்சாரத்தின் போது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளை பயன்படுத்தினால் வேட்பாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிவராசு தெரிவித்தார்.