Abp Impact: கடந்த 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் மீண்டும் தொடக்கம்

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் மீண்டும் தொடக்கம், விரைவில் மக்களின் பயன்பாட்டிற்க்கு திறக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continues below advertisement
திருச்சி மாநகரில் மிகவும் பழமையான, அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி (அரிஸ்டோ மேம்பாலம்) கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. ரூ.81 கோடி திட்ட மதிப்பில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்நிலையில் சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை கொடுக்க ராணுவ அமைச்சகம் மாற்று இடம் கேட்டது. ஆனால், ராணுவ அமைச்சகம் கேட்ட இடத்தில், மாற்று நிலம் ஒதுக்க தமிழக அரசு கொடுக்க தயங்கி வந்தது. எனவே, ராணுவ இடம் ஒப்படைக்கப்படாததால் அந்த பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி இன்னும் நிறைவடையாமல்  பல ஆண்டுகளாக கிடந்தது. அதே வேளையில் முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
 

 
இதனைத்தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல தொடங்கின. இந்த பாலத்தில், மதுரை சாலையில் கிராப்பட்டி பகுதியில் இருந்து வாகனங்கள் ஏறி, இறங்கவும், மத்திய பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை கருமண்டபம் ஆகிய வழிகளில் ஏறி, இறங்கவும் முடியும். அதே வேளையில் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழித்தடத்தில் வாகனங்கள் இறங்க மட்டுமே முடியும். ஜங்ஷன் பகுதியில் இருந்து ஏற முடியாது. இந்தநிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப் பணிகளுக்கான இடத்தினை கொடுக்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி தற்போது பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ன.

 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு  திருச்சி வந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, விரைவில் விடுபட்ட பாலப் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் விடுபட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்குவதற்காக கடந்த மே மாதம் 13 ஆம் தேதி  பூமி பூஜை போட்டது. ஆனால் கடந்த 4 மாதங்களாக எந்த பணிகளும் தொடங்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். இந்த செய்தியை நமது ஏபிபி நாடு இணையதலத்தில் வெளியீடபட்டது, இதனை தொடர்ந்து இன்று முதல்கட்டமாக ஜல்லியை கொண்டு சமன் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளனர். மேலும் விரைவில் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
Continues below advertisement