பெரம்பலூர் மாவட்டம்,  ஆலத்தூர் தாலுகா அணைப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஜே.என்.ஆர். வணிக நிறுவனத்தினர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், லாபத்தில் 10 சதவீதம் மாதாமாதம் பங்குத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்தனர்.


8 கோடி ரூபாய் மோசடி:


இதனை நம்பிய அணைப்பாடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகன் தனவேல் உள்ளிட்ட பலர் அந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால் தனவேல் உள்பட முதலீடு செய்தவர்களுக்கு அவ்வாறு லாபத்தொகை ஏதும் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தனவேல் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.


அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வணிக நிறுவனத்தில் பணிபுரிந்த நிர்வாகிகள் கன்னியாகுமரி மாவட்டம் கடியாப்பட்டினத்தை சேர்ந்த ஸ்டனிஸ்லாஸ் என்பவரது மகன் ஜெயபால், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகா, விஷ்ணுபுரம், எரச்சகுளம் பகுதியை சேர்ந்த மதன் என்பவரது மனைவி ராதிகா (வயது 28) மற்றும் அதேபகுதியை சேர்ந்த தர்மராஜ் ஆகிய 3 பேர் மீதும் ரூ.8 கோடியே ஒரு லட்சம் மோசடி செய்ததாக இந்திய தண்டணை சட்டம் 147 மற்றும் 420 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.




2 பேருக்கு வலைவீச்சு:


இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலெட்சுமி தலைமையிலான போலீசார் கன்னியாகுமரிக்கு சென்று ராதிகாவை கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர். பின்னர் அவர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் தொடர்ந்து மோசடிகள் பல்வேறு விதமாக நடைபெற்று வருகிறது குறிப்பாக சீட்டு கட்டுவது, வணிக நிறுவனங்கள் மீது முதலீடு செய்வது,  மேலும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அதை இரட்டிப்பாக மூன்றே மாதத்தில் வழங்கப்படும் என பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது.


அதிலும் குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இவற்றிலிருந்து பொதுமக்களை தற்காத்துக் கொள்ள பல்வேறு கட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். ஆகவே இனிவரும் காலங்களாவது பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண