திருச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் நீட் தேர்வை 9,105 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருச்சி மாவட்டத்தில் கூடுதலாக நீட் மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டை காட்டிலும் ஒரு மையம் குறைவாக 21 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் முற்பகல் 11மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை 40 பேர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்களுக்கு கையுறை, முகக்கவசம் அணிந்து செல்வது கட்டாயம், உணவுகளை உள்ளே கொண்டு செல்ல அனுதியில்லை என்பதால் தண்ணீர் பாட்டிலுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று காலை 10 மணி முதலே தேர்வு மையங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தர துவங்கினர், தேர்வு மையத்துக்குள் செல்லும் பொழுது ஒவ்வொரு மாணவர்களையும் வெப்பமானி கருவி மூலம் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர்.
நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை 16.14 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வை எழுதும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகள், ஆயுர் வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, வேலூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், கடலூர், கரூர், நாகர்கோவில், நாமக் கல், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக் கல் உட்பட நாடு முழுவதும் 202 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சென்னையில் 33 மையங் களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு நுழைவு தேர்வு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா 2 ஆவது அலை காரணமாக செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை 16.14 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 1.20 லட்சம் பேர் தேர்வை எழுத உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீட் தேர்வு மையங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்படி நாடு முழுவதும் 3,858 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிகளை தேசிய தேர்வு முகமை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிகளை அனைத்து மாணவர்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. மாணவ, மாணவியர் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். அனுமதி அட்டை, அடையாள அட்டை, மாற்றுத் திறனாளி யாக இருந்தால் அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. உட்பக்கம் தெளிவாக தெரியும் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம். 50 மி.லி. சானிடைசர் எடுத்துச் செல்லலாம். ஏற்கெனவே பின்பற்றப்படும் ஆடை கட்டுப்பாடுகள் இந்த ஆண்டும் கடுமையாக பின்பற்றப்படும். தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு புதிதாக என் 95 முகக்கவசம் வழங்கப்படும். ஏற்கெனவே அணிந்திருக்கும் முகக் கவசத்தை கழற்றிவிட்டு புதிய முகக்கவசத்தை அணிய வேண்டும். தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளின் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படும். உடல் வெப்பநிலை அதிகமுடைய மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தேர்வு எழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.