திருச்சி மாநகரத்தில் கடந்த ஆண்டு தொடர்ந்து சாலை விபத்துக்கள் அதிகரித்து வந்தது. சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மக்கள் தொடர்ந்து பயணம் செய்வதால் இத்தகைய விபத்துக்கள் நடைபெற்று வருவதாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையருக்கு தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில் திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், விபத்துகளை குறைக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறுகளை சீர்செய்யவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதில் நடப்பு ஆண்டில் கடந்த 4 மாதங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச்சென்றவர்கள், அதிவேகமாக அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியவர்கள், செல்போன் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றவர்கள், சிக்னல் விதியை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. இதன்படி கடந்த 4 மாதத்தில்  போக்குவரத்து விதியை மீறிய 3 லட்சத்து 83 ஆயிரத்து 24 பேரிடம் சுமார் ரூ.4 கோடியே 70 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டுள்ளது.




திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வாகன விபத்துகளையும், போக்குவரத்து இடையூறுகளையும் தடுக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறின்றி சீராக இயங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர்  கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


அதன்படி அனைத்து பகுதிகளிலும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் முழுமையாக சரி செய்யப்பட்டு போக்குவரத்து காவல்துறையினர் 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி பொதுமக்களுக்கு காவல்துறை தரப்பில் ஒலிபெருக்கி மூலம் அவ்வபோது அறிவுரைகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.




இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் கூறும்போது.. மக்கள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். குறிப்பாக வாகனம் ஓட்டும்போது சட்ட விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், அவ்வாறு கடைபிடித்தால் தேவையற்ற விபத்துகளையும், உயிர் பலியையும் தடுக்க முடியும். மேலும் சட்டவிதிகளை பின்பற்றாமல் அலட்சியப் போக்கில் வாகனங்கள் ஓட்டினால் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.