தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற சிறப்பு நடவடிக்கை ஒருமாதத்துக்கு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்மை காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து போதைப் பொருட்களின் விற்பனை, பதுக்கலைத் தடுத்து நிறுத்தும் வகையில் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பி வைத்தார். மேலும்  மார்ச் மாதம் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 27ஆம்  தேதி வரை ஒரு மாதம் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்த வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என்றார்.

 



 

இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டலத்தில் 10 நாட்களில் கஞ்சா, புகையிலை பொருட்களை விற்ற 360 பேரை ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தில் நடவடிக்கை எடுத்து காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 29ஆம் தேதியில் இருந்து நேற்று வரை 10 நாட்களில் திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்றதாக 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள், 143 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் புகையிலை பொருட்கள் விற்றதாக 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,093 கிலோ புகையிலை பொருட்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 9 நாட்களில் மட்டும் 360 பேர் இந்த வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 




மேலும் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் கடலோர பகுதிகளில் மீனவ கிராமங்களை சேர்ந்தவர்களை கொண்டு பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையால் மத்திய மண்டலத்தில் பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மண்டல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் மத்திய மண்டலத்தில் கஞ்சா, போன்ற போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்த நிலையில் தொடர் நடவடிக்கையால்  கட்டுபடுத்தபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.