நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் விஜயகாந்த் (வயது 39) இவரது மனைவி விஜயலட்சுமி (38). இவர்களது மகள்கள் அட்சயா (15), தனலட்சுமி (12), பூமிகா (10), இவர்களில் அட்சயா ஊட்டியில் உள்ள சென்மேரீஸ் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்து தேர்வு எழுதி இருந்தார். தனலட்சுமியும் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். விஜயகாந்தின் குலதெய்வமான மயிலியாத்தம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டியில் உள்ளது. இந்நிலையில், குலதெய்வ கோவிலில் கிடா வெட்டு பூஜையை முன்னிட்டு விஜயகாந்த், அவரது மனைவி விஜயலட்சுமி, விஜயகாந்தின் சித்தப்பா மகன் ஊட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (29), விஜயகாந்தின் மூன்று மகள்கள் உள்ளிட்ட 6 பேர் பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டிக்கு காரில் நேற்று காலை வந்தனர். மயிலியாத்தம்மன் கோவிலில் உள்ள மயிலி குளக்கரையில் அட்சயா, தனலட்சுமி ஆகிய 2 பேரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் குளத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து மூழ்கினர். இதைபார்த்த ஆனந்தகுமார் சிறுமிகளை காப்பாற்ற குளத்தில் குதித்துள்ளார். இதில் அவரும் நீரில் மூழ்கினார்.

 

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் குளத்தில் இறங்கி 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமிகள் உள்பட 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சிறுமிகள் உள்பட 3 பேரின் உடல்களை பார்த்து விஜயகாந்த, விஜயலட்சுமி ஆகியோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது. இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீசார் சிறுமிகள் உள்பட 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அருகே கோவில் திருவிழாவிற்காக வருகை தந்த இரட்டை சகோதரிகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், குலதெய்வ கோவிலுக்கு ஊட்டியில் இருந்த வந்த சகோதரிகள் உள்பட 3 பேர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண