திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் ரவுடி வேட்டை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 271 ரவுடிகள் (திருச்சி-28, புதுக்கோட்டை-28, கரூர்-26, பெரம்பலூர்-9, அரியலூர்-12, தஞ்சாவூர்-49, திருவாரூர்-52, நாகப்பட்டினம்-32, மயிலாடுதுறை-35) கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2,169 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 51 வகையான கொடூர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்திற்குட்பட்ட முக்கிய ரவுடியின் வீட்டை திருவைடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சோதனை செய்ததில் 1,824 மது பாட்டில்கள், கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யபட்டது. குற்ற வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் பிடிவாரண்டு நிலுவையில் இருந்த 19 ரவுடிகள் மற்றும் 779 குற்ற வழக்குகளில் சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ரவுடிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் அவர்கள் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்கவும், 282 ரவுடிகள் மீது நன்னடத்தை பிணை ஆணை பெறுவதற்கு சம்மந்தப்பட்ட கோட்டாட்சியர்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 121 ரவுடிகளுக்கு கடந்த 30 நாட்களில் நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டுள்ளது.

 



 

மேலும் ஏற்கனவே நன்னடத்தை பிணை ஆணை பெற்ற 6 ரவுடிகள் பிணை ஆணையை மீறி மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டதால் அவர்களுக்கு பிணை முறிவு ஆணை பெறப்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர். குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்தில் 11 ரவுடிகள் (திருச்சி 1, தஞ்சாவூர் 1, திருவாரூர் 9) சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் நடமாட்டங்கள், செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகளில் விரைந்து தண்டனை பெறுவதற்கு சிறப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படும் ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண