பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு அருகே மின்நகரில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் மோகன்ராஜ். இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகி. இவர் கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தேவேஷ் (4) என்ற மகனும், தன்ஷியா (2) என்ற மகளும் உண்டு. இவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்துக்கொள்ள புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலையை சேர்ந்த சுகியின் தாய் பிரேமா பெரம்பலூருக்கு வந்து அவர்களுடன் வீட்டில் தங்கி உள்ளார். மோகன்ராஜ், சுகி ஆகியோர் வேலைக்கு சென்ற பின்பு குழந்தைகளை பிரேமா கவனித்துக் கொள்வது வழக்கம்.
அதன்படி மோகன்ராஜ், சுகி ஆகியோர் நேற்று வேலைக்கு சென்ற பின்னர் குழந்தைகளை பிரேமா கவனித்து வந்தார். இந்நிலையில் காலை 10.30 மணியளவில் குழந்தை தன்ஷிகாவை காணவில்லை என பதறிபோன பிரேமா தேடத்தொடங்கினார். இதையறிந்து அக்கம், பக்கத்தினரும் குழந்தையை காணவில்லை என தகவல் தெரிவித்தார். அருகில் உள்ளவர்கள் சேர்ந்து குழந்தையை தேடினர். அப்போது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் தன்ஷியா விழுந்து கிடந்ததை கண்டனர். இதையடுத்து தன்ஷியாவை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், தன்ஷியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதனால் சிறிது நேரம் மருத்துமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, உடனே காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். மேலும் மோகன்ராஜ் தனது குழந்தை இறந்தது தொடர்பாக வழக்கு எதுவும் தேவை இல்லை என்றும், குழந்தை தன்ஷியாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும் கூறிவிட்டு குழந்தையின் உடலை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இருப்பினும் பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பெரம்பலூரில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.