திருச்சி - கல்லணை சாலை பொன்னுரங்கபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 15). திருவளர்ச்சோலையை சேர்ந்த மூர்த்தியின் மகன் குமரன்(15). இவர்கள் 2 பேரும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ரவிக்குமார் (17). இவர் செங்கல் சூளையில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நேற்று விடுமுறை நாள் என்பதால் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பொன்மலை சந்தைக்கு சென்றனர். அங்கு கோழி வாங்கிக்கொண்டு நேற்று மதியம் மீண்டும் பொன்னுரங்கபுரத்தை நோக்கி திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை அருகே சென்று கொண்டு இருந்தனர். இதனிடையே எதிரே செங்கல் சூளையில் இருந்து செங்கல்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஜீவானந்தம், குமரன் ஆகியோர் சரக்கு வேனின் சக்கரத்தில் சிக்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரவிக்குமார் படுகாயம் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவர்களின் உடல்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




மேலும் படுகாயம் அடைந்த ரவிக்குமார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது: திருச்சி - கல்லணை சாலையில் அதிக அளவில் லாரிகள் சென்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக அனைத்து லாரிகளும் அதிக வேகமாக செல்வதால் தினமும் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள்  அச்சத்துடன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் மாதம் ஒரு விபத்தாவது தொடர்ந்து நடக்கிறது. ஆகையால் மக்களின் உயிர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். லாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், அதிக வேகமாக செல்லும் லாரிகளை கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தெரிவித்தனர். 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண