பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  இரூர் கிராமத்தில் ஜியோ மார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே இயங்கி வரும் இந்த வர்த்தக நிறுவனத்தில் ஏராளமான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை இருப்பு வைக்கப்பட்டு, மொத்த விற்பனை மற்றும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வர்த்தக நிறுவனத்திற்க்கு தினம்தோறும் நூற்றுகணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது.

 

மேலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகிதியில் இந்த நிறுவனம் இயங்கிவருகிறது. இதனை தொடர்ந்து தினமும்  இரவு 10 மணிக்கு  வியாபாரம் முடிந்த பின்னர் அந்த நிறுவனத்தை ஊழியர்கள் பூட்டிவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முந்தினம் அதேபோல் வியாபாரம் முடிந்த பிறகு கடையில் பணிபுரியும் பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். மேலும்  வியாபாரத்தில் கிடைத்த இருப்பு பணம், அந்த நிறுவனத்தின் ஒரு அறையில் உள்ள இரும்பு பெட்டகத்தில் வைத்து பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் அந்த நிறுவனத்தை திறக்க வந்தனர். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.




 

மேலும் இது பற்றி அந்த நிறுவனத்தின் மேலாளர்களில் ஒருவரான ஷேக் பர்க்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த அவர்  நிறுவனத்திற்குள் சென்று பார்த்தபோது, இரும்பு பெட்டகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 17 லட்சத்து 25 ஆயிரத்து 130 மற்றும் 2 மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்க் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த மெலாளர் இது குறித்து பாடாலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

 

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் அந்த நிறுவன கதவின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து, இரும்பு பெட்டகத்தின் பூட் டை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் இது குறித்து பாடாலூர் காவல்துறை வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 



 

இதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் அந்நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய பணியாளர்களை தனித்தனியே அழைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் சந்தேகப்படும்படி யாராவது நடமாட்டம் இருந்ததா,  அந்த இரும்புப் பெட்டிக்குள் பணம் வைப்பதை இங்கு பணிபுரியக்கூடிய பணியாளர்கள் மூலமாக மற்றவர்கள் தெரிந்து கொண்டு இந்த செயலில் ஈடுபட்டார்களா என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் வர்த்தக நிறுவனத்தின் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மற்றும் அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா என அனைத்தையும் வைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.