தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6,000க்கும் அதிகமாக உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டப்படி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.   


முன்னதாக, இந்த கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு நாளுக்கு மாற்றம் செய்ய  வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை வைத்தார். 


இந்நிலையில், தமிழகத்தில் திட்டமிட்டப்படி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்தது.     


இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "  2020-21 கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண் ணிக்கை மே 2-ம் தேதி நடக்கிறது. எனவே, மே 3-ம் தேதி நடைபெறு வதாக இருந்த மொழிப்பாடத் தேர்வு மட்டும் மே 31-ம் தேதி நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக் கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடை பெறும். மேலும் தேர்வுகள் நடைபெறும் போது பின்பற்ற வேண்டிய விரிவான நிலை வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்" என்று கூறப்பட்டது. 


 முன்னதாக, கொரோனா அபாயங்களை கருத்தில் கொண்டு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  ஒத்திவைக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக 63,294 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது 


தமிழகத்தில் 9 முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். எனினும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.