அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் ஈரப்பதத்துடன் நெல்  கொள்முதல் செய்த கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளருக்கு, உணவுத்துறை அமைச்சர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணை முன்கூடியே திறக்கப்பட்டது அதன் காரணமாக சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் ஆண்டுதோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவது வழக்கம் அதே நேரத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்ற வருவதால் இந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.




அதனை அடுத்து டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நன்னிலம் மன்னார்குடி நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அறுவடை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதத்தினை உயர்த்தி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில்  திருவாரூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோருடன் சென்று கொரடாச்சேரி, ஊர்குடி ஆகிய ஊர்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊர்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை ஆய்வு செய்தபோது, அதன் ஈரப்பதம் ஆய்வு செய்யப்பட்டது.




இதில் ஒரு நெல் மூட்டை 19%, மற்றொன்று 21% மற்றொன்று 14% ஈரப்பதம் இருந்தது. அரசு விதிப்படி 17% ஈரப்பதத்தில் தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிலையில், அதைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது ஏன் என மாவட்ட ஆட்சியர் அமைச்சர் முன்னிலையில் நெல் கொள்முதல் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். ஒருவேளை ஈரப்பதம் பரிசோதனை செய்யும் கருவி தவறாக இருக்கும் என, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தெரிவித்தார். அப்படி இருப்பினும் சரியில்லாத கருவியைக் கொண்டு கூடுதல் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது முற்றிலும் தவறு எனக் கூறி, அருகில் இருந்த நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் இடம் சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அமைச்சர் முன்னிலையில் கூடுதல் ஈரப்பதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்காக நெல் கொள்முதல் நிலைய ஊழியர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.