துடிதுடித்து உயிரிழந்த நண்பர்கள்... பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்டிய போது நேர்ந்த சோகம்
நண்பனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்டிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் உட்பட இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நண்பனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்டிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் உட்பட இரண்டு பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்சாரம் தக்கி இருவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு அண்ணாநகர் 5-வது தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் லோகேஷ் (18), அதேபோல் திருநகரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் தனுஷ்குமார் (18) ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்களின் நண்பர் திருவண்ணாமலையில் 11ஆம் வகுப்பு படிக்கும் கண்ணன் (17) என்பவருக்கு பிறந்த நாள் என்பதால் வாழ்த்து பேனர் அச்சிட்டுள்ளனர். மேலும் அச்சிடப்பட்ட வாழ்த்து பேனரை நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் திருவண்ணாமலை – மணலூர்பேட்டை சாலையில் உள்ள மின்மாற்றியில் ஆபத்தை உணராமல் அனுமதி பெறாமல் கட்டியுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்மாற்றியிலிருந்து இருந்த மின் கம்பியில் பேனர் ஒட்டப்பட்ட இரும்பு சாரம் உரசி லோகேஷ் மற்றும் தனுஷ்குமார் ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார்கள்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் மின்சாரம் தாக்கி பலியான இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி பலியான தனுஷ்குமார் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ளார். நண்பர் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி நண்பர்கள் இருவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஏற்கனவே வைக்க வேண்டிய அபாய எச்சரிக்கை பலகையை விபத்து ஏற்பட்ட பிறகு தான் மின்சாரத்துறை சார்பாக எச்சரிக்கை பலகை இன்று வைக்கப்பட்டுள்ளது. நண்பரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் வைக்கச் சென்ற இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





















