திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், மாற்று உடையில் சோதனை செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2668 உயரம் கொண்ட மலையை சிவனாக கருதி அனுதினமும் ஏராளமான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிரிவலப் பாதையில் சுமார் 500க்கும் மேற்பட்ட சாதுக்கள் பக்தர்களிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். சாதுக்கள் கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளதாக காவல்துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாற்று உடையில் அணிவகுத்து நின்று செங்கம் சாலை முதல் கிரிவலப் பாதை முழுவதும் நடந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்கள் தங்குமிடம் அவர்கள் வைத்திருக்கும் உடமைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கஞ்சா பழக்கம் உள்ளதா என்று அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டதுடன் யாரேனும் கஞ்சா வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ராஜா செந்தில் என்ற இரண்டு சன்னியாசிகள் தலா ஐம்பது கிராம் கஞ்சா வைத்துள்ளதாக திருவண்ணாமலை மேற்கு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்குள்ளவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
