Continues below advertisement


திருவண்ணாமலையில் 554 ஏக்கர் பரப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான கண்காணிப்பு குழு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


554 ஏக்கர் பரப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்


திருவண்ணாமலையில் 554 ஏக்கர் பரப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனபகுதியாக அறிவிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான கண்காணிப்பு குழு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு


திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலின் கிரிவலப் பாதையில் உள்ள ஓடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சட்ட விரோத கட்டடங்கள் மற்றும் தாமரை குளத்தின் நான்கு பக்கங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, கண்காணிப்பு குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.


சட்டம் -ஒழுங்கு பிரச்னை


ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; சட்டம் -ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, ஆறு மாதங்களாக நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. திருவண்ணாமலையில், 554 ஏக்கர் நிலப் பரப்பை, பாதுகாக்கப்பட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என, வனத்துறைக்கு, மாவட்ட நிர்வாகம் கடிதம் அனுப்பி உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.


ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர், மின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கக் கூடாது. இந்த நடவடிக்கைக்கு உரிய காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


இதை பதிவு செய்த நீதிபதிகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.