திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 45 ஆயிரம் விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். காமராஜர் ஆட்சி காலத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனூர் அணை கட்டப்பட்டது. சாத்தனூர் அணையின் முழு நீர்மட்டம் 119 கன அடி. தற்போது சாத்தனூர் அணையின் நீர் கொள்ளளவு 7321 மில்லியன் கண்ணாடியாக உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 ஆயிரம் விவசாய நிலங்கள் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 5000 ஏக்கர் என மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் தண்ணீர் திருந்து விடப்பட்டுள்ளது. 


 




 


பொதுப்பணித்துறை அமைச்சர்  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாவது:


திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணையின் முழு நீர் மட்டம் 119.00 அடி சாத்தனூர் நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு 7321 மி.க.அடியாகும். சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 118.00 அடி கொள்ளளவு 7097 மி.க.அடி தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டிலிருந்து சாத்தனூர் இடதுபுறக் கால்வாயில் வினாடிக்கு 330 கன அடி நீரும், வலதுபுறக் கால்வாயில் வினாடிக்கு 200 கன அடி நீரும் ஜனவரி 11 2024 முதல் ஏப்ரல் 20 2024 வரை 100 நாட்களுக்கு நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் 2024 ஆம் ஆண்டில் அணையின் நீர் இருப்பு மற்றும் உத்தேச நீர் பகிர்மான விவரம் சாத்தனூர் அணையில் தற்போது 7097 மி.க.அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அடிப்படைத்தேவை குடிநீர் திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நீர் அளவு மண் தூர்வினால் ஏற்பட்டுள்ள கொள்ளளவு இழப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பும் சேர்ந்து 1291.00 மி.க.அடி தண்ணீர் தேவை. ஆகவே அணையின் மீதம் உள்ள பாசனம் நீர் இருப்பு 5795.00 மி.க.அடியாகும். சாத்தனூர் அணை பாசன நிலங்கள் 45 ஆயிரம் ஏக்கருக்கு இடது புறக் கால்வாயில் விநாடிக்கு 330 கன அடியும் மற்றும் வலது புறக் கால்வாய்களில் விநாடிக்கு 200 கன அடியும் முறையே என மொத்தம் 530 கன அடி வீதம் ஜனவரி 11 2024 முதல் ஏப்ரல் 20 2024 வரையிலான 100 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீரை வழங்குவதற்கும்,


 




திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு 5000 ஏக்கருக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு 1200 மில்லியன் கனஅடி நீரினை நீர் பங்கீடு விதியின்படி ஏப்ரல் 30க்குள் விவசாயிகளின் கோரிக்கையின்படி மூன்று தவணைகளில் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 46 கிராமங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 58 கிராமங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் உள்ள மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். பாசன நீரை சிக்கனமாகவும் துறை பணியாளர்களின் அறிவுரைப்படியும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அறிவிக்கப்பட்ட தேதிக்கு மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதியை நீட்டிக்கப்படமாட்டாது. தற்போது திறந்துவிடப்படும் நீரானது ஜனவரி 11 2024 முதல் 25 நாட்களுக்கு கடைமடை பகுதிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து நீர் வழங்கப்படும். எனவே விவசாயிகள் இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வானாபுரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.