திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மனித நேய வாரவிழா ஜனவரி 24 2024 முதல் ஜனவரி 30 2024 வரை ஏழு நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (24.01.2024) முதல் நாள் விழா ஒருநாள் அல்லது ஒருவாரக் கண்காட்சி நடத்தப்பட வேண்டும். இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையும் கூட்டாகச் சேர்ந்து நடத்தலாம். (25.01.2024) இரண்டாம் நாள் விழா மாவட்ட அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவியர்களை கொண்டு நாட்டியம், நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்ற கலைப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.




 


மேற்படி கலைப் போட்டிகள் கோட்ட அளவில் கோட்டாட்சியர்கள் தலைமையில் தனி வட்டாட்சியர் (ஆதிந) செங்கம், வந்தவாசி மற்றும் போளுர் ஆகியோர் மூலம் நடத்தலாம். (26.01.2024) மூன்றாம் நாள் விழா நாட்டு நலப்பணித் திட்டத்தின் (என்எஸ்எஸ்) மூலமாக கல்லூரி மாணவ, மாணவியர்களை கொண்டு ஒரு ஆதிதிராவிடர் குடியிருப்புக்குச் சென்று அவ்வூரில்
மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில் (11 மற்றும் 12ம் வகுப்பு) படிக்கும் மாணவ, மாணவியர்களுடன் அவர்தம் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் தேநீர் அருந்தி மனமகிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பர் (அரசு கலைக் கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவ மாணவியர் மூலம் நடத்தப்படும்). (27.01.2024) நான்காம் நாள் விழா அனைத்து மதத்தலைவர்களையும் ஆதிதிராவிடர்
சான்றோர்களையும் ஒன்றுக்கூட்டி நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படும். வன்கொடுமைத்தடுப்பு சட்டக்கூறுகள் குறித்து
காவல் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மூலம் நடத்தப்பட வேண்டும். இந்த விழாவினை மாவட்ட காவல் துறையில் மாவட்ட
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மூலம் நடத்தலாம். (28.01.2024) ஐந்தாம் நாள் விழா கல்வித்துறை மூலம் மாணவ,மாணவியர்களை கொண்டு தீண்டாமை ஒழிப்பு குறித்து போட்டிகள் நடத்தலாம். இவ்விழாவினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளிகள் தோறும் நடத்தலாம்.


 




(29.01.2024)  ஆறாம் நாள் விழா திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் மூலம் சமுதாயத்தில் முன்னேறிய நிலையில் உள்ள அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில் முனைவோர்கள் ,அரசியல்வாதிகள் ஆகியோர்களை கொண்டு சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனைக்கூட்டம் நடத்தலாம். (30.01.2024)  ஏழாம் நாள் விழா இறுதிநாள் நிகழ்ச்சியாக ஒரு பெருவிழா நடத்தப்படல் வேண்டும். பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் சிறப்பு தகுதி பெற்றோருக்கான பரிசுகள், ஊக்கத்தொகை வழங்குதல், தொழில் முனைவோர்களுக்கு நிதி உதவிகள் நல்குதல் போன்றவைகளை இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்படும். முந்தைய ஆறுநாள் விழாக்களுக்கு பொறுப்பானவர்கள் அடங்கிய விழாக்குழு நடத்தும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இக்குழுவின் செயல் உறுப்பினராகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவராகவும் இருப்பார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடைபெறும் மனிதநேய வாரவிழாவில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் வன்கொடுமை மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.