தென்காசி  மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறுவதற்காக நேற்று மாலை பயணிகள் காத்து  கொண்டிருந்தனர். அப்பொழுது ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்த  நிழற்கூரையில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட பயணிகள் ரயில்வே நிலைய அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார்  ரயில் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.


வாலிபர் தற்கொலை:


விசாரணையில் பாவூர்சத்திரம்  அருகே உள்ள திப்பனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 25 வாலிபர் காளிராஜா என்பது தெரிய வந்தது. மேலும் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும்  விசாரணையில் தெரியவந்தது. அதோடு அவர் நேற்று  காலையில்  வேலைக்கு சென்று வருவதாக வீட்டில்  கூறி  விட்டு மதிய உணவை ஒரு கூடை பையில்  எடுத்துக் கொண்டு தனது பைக்கில் வேலைக்கு கிளம்பியுள்ளார்.


ஆனால் வேலைக்கு செல்லாமல் பாவூர்சத்திரம் ரயில்வே நிலையத்திற்கு வந்த காளிராஜா, ரயில் நிலையத்திற்கு வெளியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில்வே நிலையத்தின் பிளாட்பார்ம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள ரயில்வே நிழற்  கூரையின் ஒரு பகுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


காரணம் என்ன?


நேற்று இரவு இறந்த வாலிபரின் உடலை  பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரயில்வே போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரயில்வே போலீசார் வாலிபர் காளிராஜா எதற்காக ரயில் நிலையத்திற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினையா? அல்லது காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், உறவினர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060..