தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்துள்ள வல்லநாடு ஆற்றுப் பாலத்தை ரூம் 13.40 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.




கன்னியாகுமரி காஷ்மீர் இடையே தேசிய நெடுஞ்சாலைடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பணிகள் 2013 ஆம் ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.




இந்த நான்கு வழிச்சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்கு வழி பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் கட்டப்பட்ட 4 ஆண்டுகளில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் பாலத்தின் ஒரு பகுதியில் (திருநெல்வேலி தூத்துக்குடி வழித்தடம்) நடுவில் பெரிய துளை விழுந்தது. இதனால் சுமார் ஆறு மாத காலம் இந்த  பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது பின்னர் ரூ 3.14 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது.




இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி பாலத்தின் மற்றொரு பகுதியில் (தூத்துக்குடி திருநெல்வேலி வழித்தடம்) இரண்டு பெரிய துளைகள் விழுந்தது.இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருமார்க்கங்களில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒரு வழிப் பாதை (திருநெல்வேலி தூத்துக்குடி வழித்தடம்) வழியாக இயக்கப்பட்டன.பாலம் சேதம் அடைந்து இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது பாலத்தை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.




 இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் வேல்ராஜிடம் கேட்டபோது, "வல்லநாடு பாலத்தை சீரமைக்க ரூ.13.40 கோடியில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் பாலத்தை சீரமைக்கும் பணிகளை துவங்கி உள்ளது. 12 மாதங்களில் இப்பணிகளை முடித்து விடுமாறு டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு விரைவாக பணிகளை முடிக்க ஒப்பந்த நிறுவனத்துடன் தெரிவித்துள்ளோம். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாலத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட உள்ளது எனவே இனிமேல் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் எத்தகைய கனரக வாகனங்கள் சென்றாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாலம் சீரமைக்கப்படும் என தெரிவித்த அவர் சீரமைப்பு பணிகள் ஒரு பகுதியில் நிறைவடைந்தது அந்தப் பகுதி வழியாக வாகன போக்குவரத்துக்கள் அனுமதிக்கப்படும் தொடர்ந்து அடுத்த பகுதியில் சீரமைப்பு பணிகள் துவக்கப்படும்" என தெரிவித்தார்.




இதுகுறித்து சமூக ஆர்வலர் சுகன் கூறுகையில், தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு ஆற்றுப்பாலம் கட்டய 6 ஆண்டில் இருந்து இன்று வரை அதன் கான்ங்கிரீட் பல முறை சேதமடைந்து உள்ளது. ஏற்கனவே பாலம் சேதமடைந்த போது பாலத்தின் கான்ங்கிரீட் மேலே ஃபைபர் சீட் விரிக்கப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் பாலத்தின் கான்ங்கிரீட் பல முறை சேதமடைந்து வருகிறது. தற்போது பாலத்தின் கான்ங்கிரீட் கட்டமைப்பு உள்புறத்தில் ரசாயன பூச்சு மூலம் மீண்டும் பராமரிப்பு பணி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடைபெற உள்ள ரசாயன பணியின் உறுதிதன்மை குறித்து வலுவான சந்தேகம் எழுவதாக கூறிய சுதன், ஆகவே பாலத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து தற்போது கொடுத்துள்ள ரசாயன பூச்சு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், புதிதாக கான்ங்கிரீட் கட்டமைப்பை மாற்றும் ஒப்பந்தம் மேற்க்கொள்ள தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என கூறும் இவர் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.