தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 170 குடோன்கள் உள்ளன. இங்கு சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் அரசு உத்தரவுப்படி குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாநகராட்சி பகுதியில் 50 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.10ம் நகராட்சி பகுதியில் ரூ.7.50ம் இரண்டும் இல்லாத பகுதிகளில் ரூ.5ம் பஞ்சப்படி நாள் ஒன்றுக்கு 88 ரூபாயும் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை அரசு இவர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு வெறும் ரூ.1.85 மட்டுமே வழங்கி வருவதாக கூறப்படுகிறது.


எனவே சுமை தூக்குவோரை, தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தற்காலிக சுமை தூக்குவோரை வரண்முறை படுத்தவேண்டும், தகுதி அடைந்த சுமை தூக்குவோர் 3500 பேர்களுக்கும் 2020 ஆம் ஆண்டிலிருந்து பச்சை அட்டை வழங்க வேண்டும், ஓவர்லோடு, அட்டிகூலி பேச்சுவார்த்தை மூலம் முடிவெடுக்கும் முறையை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும், கூலி உயர்விற்கான 2 வழக்குகளில் நிர்வாகம் ஆஜராகி காலம் கடத்தாமல் முடிவு ஏற்பட வகை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஜனநாயக அங்காடிகள் சுமைதூக்குவோர்  மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம் ( ஏஐசிசிடியூ) சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் படி நெல்லையில் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் ஏஐசிசிடியூ சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் சுமார் 80-க்கும் மேற்பட்ட பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்.


தொடர்ந்து அனைவரும் பேரணியாக சென்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை மறியலில் செய்யப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 81 பேரை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து போக்குவரத்து நெருக்கடி சீர் செய்யப்பட்டது. போராட்டம் குறித்து சங்க நிர்வாகி கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, "1982 இல் துவங்கப்பட்டது.  அந்த குடோன்களில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு பல வருடமாக போராடி வருகிறோம்.  குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த அரசும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றவில்லை. தற்போதைய அரசு இதனை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அரசு எங்களது கோரிக்கையை  நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியாக  போராட்டங்கள்  நடத்தப்படும்" என தெரிவித்தார். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.