நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ளது அடைமிதிப்பான் குளம் கிராமம். இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது, இந்த கல்குவாரியில் நேற்று முன் தினம் இரவு கற்களை ஏற்றுக் கொண்டிருந்தபோது பாறாங்கல் சரிந்து விழுந்ததில் ஆறு பேர் சிக்கிக்கொண்டனர். இதில் முருகன், விஜய் ஆகிய 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிட்டாச்சி இயந்திரத்தில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆப்ரேட்டர் செல்வம் என்பவர் தன்னை காப்பாற்றும் படி கையசைத்து சொல்லிக்கொண்டே இருந்தார். 


இருப்பினும் அவ்வப்போது ஏற்பட்ட மண் சரிவால் அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது, 17 மணி நேர போராட்டத்திற்கு பின் செல்வத்தையும் பத்திரமாக மீட்டனர், மீட்கப்பட்ட அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அதுவரை தனது உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த செல்வம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.




இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குவாரியில் சிக்கியிருக்கும் மேலும் மூன்று பேரை மீட்பதற்காக நேற்று இரவு 12 மணிக்கு விபத்து நடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.  இரவில் முதற் கட்ட ஆய்வை முடித்து இன்று காலை 7 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இன்ஸ்பெக்டர் விவேக் வத்சவ் தலைமையில் குவாரியில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கான பணியை தொடங்கியுள்ளனர். குவாரியில் தற்போது பாறைகளுக்கு இடையே சிக்கி இருக்கும் லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார்,  ராஜேந்திரன் மற்றும் லாரி கிளீனர் முருகன் 3 பேரையும் மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து மீட்பு பணிகளை தொடங்கியுள்ளனர்.




மேலும் கல்குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக,  முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் 304, 304 A, 336 மூன்று பிரிவுகளின் கீழ் குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன், குவாரி ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் மற்றும் மேலாளர் செபஸ்டின் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் குவாரி உரிமையாளரான திசையன்விளையை சேர்ந்த சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டு உள்ளார், இந்த நிலையில், முதல்வர் உத்தரவுப்படி விபத்து நடந்த பகுதியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் , மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம்,  ஆகியோர்  நேற்று மாலை நேரில் ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.  இதனை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் மற்றும் விஜய் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியில் அறிவிக்கப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.




 


தொடர்ந்து சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர்  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கல்குவாரி விபத்தில் 6 பேர் சிக்கியதில் 3 பேர் மீட்கப்பட்டனர், மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர், அவர்களையும் மீட்கும் முயற்சியில் தீவிரமாக மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர், மூன்றாவதாக மீட்கப்பட்ட செல்வம் என்பவரை இடிபாடுகளில் இருந்து மீட்கும் முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்களும் உதவினர், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது, முதல்வர் உத்தரவுப்படி நேரடியாக விபத்து நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.


சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு முதல்வர் அறிவித்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு விபத்து நடந்த குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஐந்து வருடங்களுக்கு இந்த குவாரி செயல்பட அனுமதி உள்ளது, எனினும்  தவறு யார் செய்திருந்தாலும் சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும்.  தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் சிக்கல் நிலவி வருகிறது. தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வரும் சூழலில் விபத்து பகுதியில் மீட்பு பணி நடத்துவது சவாலான காரியம். விபத்து நடந்த பகுதியில் அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம் என தெரிவித்தார்.