காவல்நிலையத்தில் தஞ்சம்; ரிஜிஸ்டர் ஆபீஸில் கல்யாணம் - மூன்றே நாளில் முடிந்து போன காதல் ஜோடியின் வாழ்க்கை!

தூத்துக்குடியில் புதுமண தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தூத்துக்குடி முருகேசன்நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் மாரிசெல்வம்(வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா(20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. கார்த்திகா பட்டப்படிப்பு முடித்து உள்ளார். இவர்களது காதலுக்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடந்த 30-ந் தேதி மாரிசெல்வம், கார்த்திகாவை அழைத்துக் கொண்டு கோவில்பட்டிக்கு சென்று விட்டாராம். அங்கு கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். அதன்பிறகு கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டார்களாம். தொடர்ந்து புதுமண தம்பதிகள் 2 பேரும் கோவில்பட்டியிலேயே தங்கி இருந்தனர்.

Continues below advertisement

திருமணமாகி 3 நாட்களுக்கு பிறகு காலையில் காதல் தம்பதியினர் முருகேசன்நகரில் உள்ள மாரிசெல்வத்தின் வீட்டுக்கு வந்து உள்ளனர். இதனை மர்ம ஆசாமிகள் கண்காணித்தபடி இருந்து உள்ளனர். மாரிசெல்வத்தின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டார்களாம். மாரிசெல்வம், கார்த்திகா 2 பேரும் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளனர். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 மர்ம ஆசாமிகள் மாரிசெல்வம் வீட்டுக்கு வந்து உள்ளனர். அவர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து, அங்கு இருந்த மாரிசெல்வம், கார்த்திகா ஆகிய 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் புதுமண தம்பதியினர் பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு மர்ம ஆசாமிகள் 6 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, காதல் திருமணம் செய்ததால் கார்த்திகாவின் உறவினர்கள் யாரேனும் கொலை செய்தார்களா, அல்லது வேறு யாரேனும் கொலை செய்து உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறும் போது, புதுமண தம்பதிகளை கொலை செய்த, கொலையாளிகளை கைது செய்வதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். தூத்துக்குடியில் புதுமண தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement