தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டியில் அப்பநேரியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான மாருதி இண்டஸ்டிரிஸ் என்ற ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் மரம் அறுத்து, தீப்பெட்டி தயாரிக்க தேவையான குச்சி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் கோவில்பட்டி ஊரணி தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் (75) என்பவர் தயாரிக்கப்படும் குச்சியை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுவந்துள்ளார். 




ஆலை இயங்காத நிலையில் மாரியம்மாள், மேலும் அவருடன் பணிபுரியும் சித்திரம்பட்டியை சேர்ந்த கனகலெட்சுமி இருவரும் குச்சியை காய வைக்கும் வேலை பார்த்து வந்துள்ளனர். மதிய நேரம் என்பதால் இருவரும் இயந்திரங்கள் இருக்கும் பகுதியில் சாப்பிட சென்ற போது திடீரென இயந்திரம் தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. மேலும் தயாரிக்கப்பட்டு இருந்த குச்சி பகுதியிலும் தீப்பிடித்து பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனைப்பார்த்த மாரியம்மாள், கனகலெட்சுமி இருவரும் அலறி அடித்து ஓடத்தொடங்கியுள்ளனர். ஆனால் மாரியம்மாள் அங்குள்ள சிறிய தடுப்பில் மோதி தீ எரிந்து கொண்டு இருந்த குச்சி பகுதியில் விழுந்ததால், மாரியம்மாள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.




கனகலெட்சுமிக்கு இலேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து  தீயணைப்புத்துறையினர் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர் தீயை பரவவிடமால் தடுத்தனர். மேலும் காயமடைந்த கனகலெட்சுமி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மின் கசிவு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேற்கு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சித்திரம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் மாரியம்மாள், [க/பே.தங்கவேல் (லேட்)] (வயது 70) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கனகராஜேஸ்வரி, க/பெ.காட்டு ராஜா (லேட்) (வயது 49) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வரின்  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.