தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 5வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 




தூத்துக்குடியில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மற்றும் தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் இணைந்து அமைத்துள்ள மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமான என்டிபிஎல் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.




தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்எல்சி அனல் மின் நிலையத்தில் வழங்குவது போன்று என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ஈஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக என்டிபிஎல் நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கடந்த 13-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் சுமார் 800 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.




போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் மதுரை மண்டல தொழிலாளர் அலுவலகத்தில் வைத்து தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்தவிட உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து, தொழிலாளர்களிள் வேலைநிறுத்த போராட்டம்  5-வது நாளாக நீடித்து வருகிறது.




இந்த போராட்டம் தொடர்பாக என்டிபிஎல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை அனல்மின் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவில் தான் நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை நேற்று காலையில் வேறு இடத்துக்கு மாற்றினர்.





அனல்மின் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்திய ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கைகளை தூக்கி பிடித்தவாறு 1 கி.மீ. தொலைவுக்கு நடைபயணமாக சென்று, என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் துறைமுக விருந்தினர் மாளிகை சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே போராட்டத்தை தொடர்ந்தனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் என்டிபிஎல் திட்ட செயலாளர் அப்பாத்துரை தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் 5-வது நாளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சிஐடியு மாநில செயலாளர் ரசல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.




ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் 5-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. 2 அலகுகளிலும் சேர்த்து 600 மெகாவாட் அளவுக்கே மின் உற்பத்தி இருந்தது. இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக என்டிபிஎல் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து என்டிபிஎல் அனல்மின் நிலைய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.