நெல்லை மாவட்டத்தில் கட்சி மற்றும் அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் நெல்லை பாஜக மாவட்ட அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியா பொருளாதார வளர்ச்சி அரசியல் மேம்பாடு சமுதாய மேம்பாட்டில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2014ல் இருந்ததைவிட இந்தியா 9 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளது. பத்தாவது இடத்தில் இருந்து இந்த ஒன்பது ஆண்டு ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. 2015ல் 428 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலை மாறி இந்த ஒன்பது ஆண்டுகளில் 86 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளது. புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. டிஜிட்டல் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியை எட்டி வருகிறது. 80 கோடி பேருக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ விதம் கொரோனா காலத்தில் இருந்து தற்போது வரை தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு வேலை வாய்ப்பு வழங்குவதை விளம்பரப்படுத்துவதில்லை. 4% பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்க முடியும். மீதம் உள்ள நபர்களுக்கு தனியார் மூலமாக வேலை வாய்ப்புகள் வழங்க முடியும். ஒரு வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தோம் ஆனால் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறு தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் முத்ரா கடன் வழங்கப்பட்டதன் மூலம் 76 லட்சம் பேர் புதிய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 2014 ஆம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்தது. இந்த 9 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளது. புதிய இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
காரைக்குடியிலும் விமான நிலைய அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் மதுரை விமான நிலைய விரிவாக்கம் போன்றவை நடந்து வருகிறது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கூடுதல் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி மட்டுமே ஒதுக்குகிறது. பணிகள் முழுவதும் மாநில அரசால் செய்யப்படுகிறது. இந்த பணிகளில் தவறு மற்றும் குறைபாடு இருந்தால் மத்திய அரசு அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் அமைப்புகளாக கூடி கழிவுகள் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு முயற்சித்தால் மட்டும் தாமிரபரணி நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க முடியாது. பொதுமக்களும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்