தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், கோயிலின் அன்னதான கூடத்தை ஆய்வு செய்து எந்த நேரமும் தூய்மையுடன் பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

                                 

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் தனியார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை பங்களிப்புடன் 150 கோடி ரூபாயில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்வதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் விஐபி தரிசனத்தால்  நீண்ட நேரம் காத்திருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். எனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஐபி தரிசனத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும், முதலமைச்சரின் துறைசார்ந்த அறிவிப்பின்படி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தினை  நாளை மறுநாள்  தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

                                 

                                                                         (minister sekar babu meetin)

இத்திட்டத்தின்படி நாளை மறுநாள்  முதல் காலை, மதியம், இரவு என கோயில் திறந்து இருக்கும் வரையில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும் திருச்செந்தூரில் செயல்படாமல் உள்ள அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளி தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்றார்.

 

                               

 

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் காது குத்துவதற்கு முறைகேடாக அதிக பணம் வசூலிப்பது குறித்து விசாரிக்கப்படும் என்ற அவர்,கோவில் சொத்துகளை யார் அபகரித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.