நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலத்தில் பேராயர் தரப்பிற்கும், லே செயலாளர் தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. லே செயலாளர் ஆதரவாளரான திமுக எம்பி ஞான திரவியத்தை கடந்த ஜூன் 23 ம் தேதி நெல்லை திருமண்டலத்தின் மேல்நிலை குழு செயலாளர் பொறுப்பில் இருந்தும், நெல்லை திருமண்டல திருச்சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஜான்ஸ் பள்ளி தாளாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கம் செய்து பேராயர் பர்னபாஸ் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து எம்பி ஆதரவாளர்களும், புதிய நிர்வாகி ஆதரவாளர்களும் ஜான்ஸ் பள்ளி வளாகத்தில் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனை தொடர்ந்து நெல்லை திருமண்டல திருச்சபையின் அலுவலகத்தில் கடந்த ஜூன் 27 ம் தேதி நுழைய முற்பட்ட பேராயர் ஆதரவாளர் காட்பரே நோபல் என்பவர் எதிர் தரப்பினரால் (லே செயலாளர்) கடுமையாக தாக்கப்பட்டார்.


இந்த விவகாரத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காட்பிரே நோபல் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் திமுக எம்பி ஞான திரவியம் நெல்லை திருமண்டல திருச்சபையின் லே செயலாளர் ஜெயசிங் உள்ளிட்ட 33 பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கொலை முயற்சி தகாத வார்த்தையால் பேசுதல்,கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைமை எம்பி இடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய லே செயலாளர் உள்ளிட்ட நபர்கள் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் அதனை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திமுக எம்பி ஞான திரவியம் இன்றைய தினம் நிலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


இது தொடர்பான செய்திகள் வெளியே வந்த நிலையில் பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்தில் தாக்குதலுக்கு உள்ளான பேராயர் காட்பரே நோபல் என்பவர் நெல்லை கொக்கிரகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், என்னை கடுமையாக எம்.பி ஆதரவாளர்கள் தாக்கினர். அதில் கடுமையான காயம் ஏற்பட்டது. பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் நான் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு எம் பி முதல் குற்றவாளியாகவும், லே செயலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு மொத்தம் 33 பேர் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளி உட்பட மற்ற நபர்கள் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரிய நிலையில் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.


நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் முதல் குற்றவாளியாக உள்ள நிலையில் ஜாமீனும் பெறவில்லை, கைதும் செய்யப்படவில்லை. அமைச்சர் சபாநாயகர் மாவட்ட ஆட்சியர் உடன் அவர் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவர் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடனும், உயர் அதிகாரிகளுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். சாதாரண நபருக்கு ஒரு நியாயம், உயர் பொறுப்பில் இருப்பவருக்கு ஒரு நியாயமா? என கேள்வி எழுப்பி உடனடியாக முதல் குற்றவாளியாக இருக்கும் திமுக எம்பி யை கைது செய்ய வேண்டும் என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.