தப்பியோடிய பிரபல ரவுடியின் கால்முறிவு:


தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் பாலமுருகன் (35). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 70க்கும் அதிகமாக குற்ற வழக்குகள் உள்ளது. குறிப்பாக இவர் சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் உள்ளார்.  பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய  இவரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் கடையம் அருகே ரவுடி பாலமுருகன் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி பதுங்கி இருந்த பாலமுருகனை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயற்சித்ததில் கீழே விழுந்து பாலமுருகனுக்கு கால்முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

  


ரவுடி மீதான பல்வேறு வழக்குகள்:


கடந்த 2014 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜன் என்பவரை 2 லட்சம் பணத்திற்காக கொலை செய்து போர்வையில் சுற்றி ஆற்றில் தூக்கி எரிந்துள்ளார். அதன்பின் 2019 ஆம் ஆண்டு கடையத்தை சேர்ந்த வயதான தம்பதியான செந்தாமரைக்கண்ணன் மற்றும் அவரது மனைவி சண்முகம் ஆகியோர் தோப்பு வீட்டில் தனியாக இருந்த போது அரிவாளைக்காட்டி மிரட்டி பாலமுருகன் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது தம்பதிகள் இருவரும் வீட்டில் இருந்த பொருட்களை கொண்டு கொள்ளையன் மீது வீசி அவனை விரட்டியடித்தனர். இது சமூக வலைதலங்களில் வைரலான நிலையில் தம்பதிகளின் வீர தீர செயலுக்கு முதல்வரால் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இது போன்ற பல வழக்குகளில் தொடர்புடைய பாலமுருகன் பல்வேறு வழக்குகளில் கைதாகி பின் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவமும் நடந்தது.


தப்பியோடிய சம்பவமும், கைதும்:


கடந்த 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய குற்றவழக்கில் கைதாகி பேராவூரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் இருந்த போது தப்பிச் சென்றார். பின் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2023 ஆம் ஆண்டு கேரள மாநிலம் மறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் கேரளா போலீசார் கைதான நிலையில் காவலில் கொண்டு செல்லும் போது திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகில் போலீசார் தாக்கிவிட்டு மீண்டும் தப்பியோடினார். அதன்பின் தப்பியோடியவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே போல 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலமுருகன் வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் நிலைய வழக்குக்காக தமிழக போலீசார் கடந்த மே மாதம் தேனி பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருச்சூரில் இருந்து கொண்டு வரும் வழியில் போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பி சென்றார். இந்த நிலையில் தான் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் சென்ற ரவுடி பாலமுருகனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.