குருவனம் மற்றும் தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் நெல்லை பாளையங்கோட்டை மேலக்கோட்டை பூங்காவில் இயற்கை வண்ண ஓவியம் பயிலரங்கம் மற்றும் கண்காட்சி தொடக்க விழா தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு ஓவியம் வரைந்து பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது. ஆனால் அதனை யாரும் பெரியதாக மதிப்பதில்லை. அதனை புனரமைப்பு செய்கிறோம் என்ற பெயரில் ஸாண்ட் பிளஸ்ட் செய்தும் வெள்ளையடித்தும் அதனை சேதப்படுத்தி விடுகிறார்கள். தஞ்சை பெரிய கோவில் சுவரில் இருக்கும் ஓவியங்கள் மீது தேர்வு எண்களை எழுதி வைக்கின்றனர். தொன்மைகள் குறித்து நமக்கு அக்கறை இல்லாததை இது போன்ற செயல் காட்டுகிறது. தொன்மையும், தொடர்ச்சியும் உள்ள செம்மொழி தமிழ் மொழியாகும். இந்த மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இல்லாமல் பல மொழிகள் தொன்மையாக இருந்தாலும், தொடர்ச்சி இல்லாமலும் அதைப் பேசக்கூடிய நபர்கள் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கில் மத்திய அரசு அந்த மொழிக்கு தான் நிதி அளித்து உதவுகிறது. தொடர்ச்சி இருக்கக்கூடிய மொழி நம்முடைய தமிழ் மொழி. நம்முடைய பண்பாட்டை பற்றி, நம்முடைய கலை வடிவங்களை பற்றி தொடர்ச்சியான புரிதல் என்பது நமக்கு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றது.
அதனால் தான் கல்வெட்டுகளை படிப்பதற்கு கூட ஆட்கள் இல்லாத நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது. அடுத்த தலைமுறையில் அதிகமாக கல்வெட்டுக்களை படிக்கக்கூடியவர்கள் கூட பயிற்சி பெற்றவர்கள் அதிகமாக இல்லாத ஒரு சூழலை நாம் சந்தித்து கொண்டு இருக்கிறோம், உலகம் விடிந்து கொண்டு தான் இருக்கிறது ஒருபுறம், அதே நேரம ஒரு புறம் சுருங்கி கொண்டும் இருக்கிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வாழ்க்கை என்பது கலை. கலைஞர்கள் வாழ்க்கையில் இருந்துதான் கலையை கண்டெடுக்க முடியும். தொன்மையை கண்டுபிடிக்கும் அகழ்வாராய்ச்சி பெருமையோடு நடத்தி கொண்டிருக்கும் நிலையில் தான் செயற்கை நுண் அறிவு குறித்தும் பேசிக்கொண்டு இருக்கிறோம். தொழில்நுட்பம் இயந்திரமயமாக்கல் நிறைந்த இந்த உலகில் நாம் வாழக்கூடிய தகுதியை இழந்து வருகிறோம். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய காலகட்டத்தில் நாம் இருந்து வருகிறோம். வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் பல பிரச்னைகளை சந்திக்க கூடிய சூழல் உருவாகும். நம் கருத்துக்கள் எடுத்து வைக்கும் விஷயங்களுக்கு எதிராக வன்முறையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் பெண்கள் வைக்கக்கூடிய கருத்துக்களுக்கு எதிராக பல செயல்கள் நடந்து வருகிறது. இயற்கையின் மீது நாம் செலுத்திய வன்முறையை உள்வாங்கிக் கொண்டு இன்று இயற்கை பதிலடி கொடுக்கும் நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நமது பழமை, மொழி ஆகியவற்றை உணரும் போதுதான் கலை முழுமை அடைகிறது. கலை, மொழி போன்றவைகளுக்காக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் ஆட்சியை தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் நடத்தி வருகிறார். கலை, மொழி இலக்கியங்கள் நாம் யார் என்ற அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ளும் போதுதான் ஒரு சமூகம் ஒரு இனம் என்ற அடையாளங்களோடு அடுத்த தலைமுறைக்கு சென்றடைய முடியும். இதற்கான அடித்தளத்தை திமுகவும், தமிழக முதல்வரும் உருவாக்கி தந்து கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்