நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரைச் சேர்ந்த வாலிபர் நம்பி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், தலைமையில்  நெல்லை சரக டிஐஜி ப்ரவேஷ் குமார் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்ட  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜாதி ரீதியிலான கொலைச் சம்பவங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஜாதி ரீதியான வன்முறை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல ஐஜி அஸ்ராகார்க் கூறும் பொழுது, தென் மாவட்டங்களில் ஜாதிய ரீதியிலான கொலை குற்றங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தடுக்க டிஐஜி மற்றும் எஸ்பிக்கள் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நெல்லை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு 204 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு 184 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் மட்டும் 985 பேர் குற்றப்பிணை ஆணையை மீறி செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் நடைபெறும் தேவர் ஜெயந்தி, இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி போன்றவைகளில் சிறு பிரச்சினைகள் கூட இல்லாமல் சிறப்பாக தென் மாவட்ட காவல்துறை நடத்தியுள்ளது. ஜாதி ரீதியிலான பிரச்சனைகள் வராமல் இருக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.




தொடர்ந்து பேசிய அவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு 15 கோடி ரூபாய் வரை வங்கி கணக்கில் உள்ள பணம் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா புழக்கத்தை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் ஜாதி மோதலில் ஈடுபட்டு சிறை சென்று மீண்டும் வந்து குற்றச்சம்பவங்களில் அவர்கள் ஈடுபடாமல் இருக்க முன் எச்சரிக்கை கைதுகள்,  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மற்றும் ஊர் கூட்டங்கள் நடத்தி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரை வழங்கும் செயல்கள் போன்றவை செய்யப்பட்டு வருகிறது. சீவலப்பேரி கொலை வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபட்டாலும் நீதிமன்றம் மூலம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்...