தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறிநோய் தடுப்பு தின விழிப்புணர்வு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து தெரிவித்ததாவது,உலக வெறிநோய் தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு வெறிநாய் கடியினால் இறப்புகள் அதிகமாக பதிவானதால் இதை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தும் பொருட்டு மாநில அளவில் ”தேசிய வெறிநாய் கடி தடுப்பு திட்டம்” தொடங்கப்பட்டது.




நாய்கடி ஏற்பட்டால் எடுக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ரேபீஸ் வெறிநாய் கடி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் நாய், பூனை, குரங்கு, ஆடு, மாடு, குதிரை, நரி, கீரி, ஓநாய் மற்றும் பிற வனவிலங்குகள் போன்றவை கடித்தாலும் ஏற்படலாம். இந்நோய் 95 சதவீதம் வெறிநாய் கடிப்பதன் மூலம் ஏற்படுவதால் வெறிநாய்க்கடி நோய் என்று அழைக்கப்படுகிறது. முதலில் காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்படலாம். அதைதொடர்ந்து பதற்றம் மற்றும் தண்ணீரை கண்டாலே பயப்படும் சூழல் ஏற்படலாம். நாய்/வீட்டு விலங்கு கடித்தவுடன் காயத்தை குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்பு தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். குழாயிலிருந்து கொட்டுகின்ற தண்ணீரால் கழுவுவது மிகவும் நல்லது, கிருமிநாசினி (ஆல்கஹால், டெட்டால்) உபயோகப்படுத்துவது நல்லது, கடித்த இடத்தில் கட்டு மற்றும் தையல் போடுவதை தவிர்க்கவும். ரேபீஸ் நோய்க்கு தடுப்பூசிகள் உள்ளன. நான்கு ஊசிகளில் ரேபீஸ் நோயை 100 சதவீதம் வரவிடாமல் தடுத்துவிடலாம். இந்த ஊசிகள் தொப்புளில் போடப்படுவதில்லை. கையிலேயே போட்டுக்கொள்ளலாம். நாய் கடித்த உடனேயே இச்சிகிச்சையை தொடங்கிவிட வேண்டும்.




தமிழ்நாட்டில் நாய்கடிக்கு ARV தடுப்பூசிகள் 6,21,726 vials, இமிணோகுளோபின் 35,502 vials மற்றும் பாம்புக்கடிக்கு ASV தடுப்பூசி 1,07,087 இருப்பில் உள்ளன. கால்நடை மருத்துவர்கள், கால்நடை பணியாளர்கள், நாய் பிடிப்போர், மிருகக்காட்சி சாலையில் பணிபுரிவோர், வனத்துறை அலுவலர்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்வது நல்லது. முன்னெச்சரிக்கை ரேபீஸ் தடுப்பூசி முதல் நாள் முதல் தவணை, 7வது நாள் இரண்டாவது தவணை, 21வது நாள் மூன்றாவது தவணை போட்டுக்கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய் குட்டிக்கு ரேபீஸ் தடுப்பூசியை கண்டிப்பாகப் போடவேண்டும்.




பின்னர் செய்தியாளர்களுக்கு சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், காச நோய் குறித்து பரிசோதனை செய்வதற்காக மேம்படுத்தப்பட்ட பரிசோதனை மையமானது தமிழகத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.படிப்படியாக 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த மையம் தொடங்கப்படும். தமிழகத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை 4454 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் தற்போது 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது என்ற அவர், தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவர்கள் மருந்தாளுனர்கள் காலிப் பணியிடங்கள் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும் என்றார்.


நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் நோயைத் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் டாக்டர் செல்வநாயகம், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தூத்துக்குடி ஊரக வளர்ச்சி முகமை பதவிய ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் , ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா,தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன், காசநோய் மருத்துவ பணிகள் சுகாதார இயக்குனர் சுந்தரலிங்கம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.