முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கோவில் சுற்றளி எனப்படுவது போல முழுவதும் கற்களால் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல் கல்லுப்பள்ளி எனப்படுகிறது. பாண்டியர் முதல் சேதுபதிகள் வரையிலான காலத்தில் கட்டப்பட்ட பழமையான கல்லுப்பள்ளிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊர்களில் உள்ளன. அவ்வாறான ஒரு கல்லுப்பள்ளி தான் பெரியபட்டினத்தில் உள்ள ஜலால் ஜமால் பள்ளி. தொழுகை மாடம், மகாமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்பில் இப்பள்ளி அமைந்துள்ளது. மகாமண்டபத்தைச் சுற்றிலும் தாழ்வாரம் அமைந்திருக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள தாழ்வாரம் முன்மண்டபமாக உள்ளது.




இதை ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக் கூறும்போது, மகாமண்டபத்தின் உள்ளே மேற்குப் பகுதியின் நடுவில் ஒரு குவிந்த அமைப்பில் தொழுகை மாடம் உள்ளது. மகாமண்டபத்தின் தெற்கிலும் வடக்கிலும் தலா ஒரு வாசலும், கிழக்கில் 3 வாசல்களுமாக மொத்தம் 5 வாசல்கள் உள்ளன. இஸ்லாமியரின் 5 கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் (தர்மம்), ஹஜ் என்பதன் அடையாளமாக ஐந்து வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் கிழக்கில் உள்ள மூன்று வாசல்களில் நடுவில் உள்ள வாசலில் இருந்து தொழுகை மாடம் வரை அதன் இருபுறமும் கூட்டுத் தூண்கள் உள்ளன. மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் பாண்டியர் கால வெட்டுப்போதிகையும், நாயக்கர் கால தாமரைப்பூ, பூப்போதிகைகளும் உள்ளன.




முன்மண்டபத்தின் தெற்கு, வடக்குப் பகுதியில் இரு வாசல்கள் அமைந்துள்ளன. இதில் ஒரு வரிசைக்கு 4 என இரண்டு வரிசையில் மொத்தம் 8 சதுரத் தூண்கள் வெட்டுப்போதிகைகளுடன் உள்ளன. இங்கு உள்ள தூண்கள் மற்றும் போதிகைகளின் அமைப்பைக் கொண்டு இப்பள்ளி பிற்காலப் பாண்டியர் காலத்தில் கி.பி.12-13-ம் நூற்றாண்டுகளில் தமிழர் கட்டடக்கலை அமைப்பில், கடற்கரைப் பாறைகளால் கட்டப்பட்டு விஜயநகர, நாயக்கர், சேதுபதி மன்னர்கள் காலத்தில் பழுது பார்க்கப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது.




திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள கி.பி.1247-ம் ஆண்டைச் சேர்ந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில், கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்தில் இருந்த சோனகச் சாமந்தப்பள்ளியான பிழார்ப்பள்ளி என்ற இஸ்லாமியப் பள்ளி குறிப்பிடப்படுகிறது. மேலும் சமீபத்தில் வாலாந்தரவையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் பெரியபட்டினத்தில் இருந்த சூதபள்ளியான ஐந்நூற்றுவன் பெரும்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லை சொல்லும்போது, அவ்வூரில் இருந்த பிழார் பள்ளி, தரிசாப்பள்ளி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.




பெரியபட்டினம் ஜலால் ஜமால் பள்ளியில் உள்ள பிற்காலப் பாண்டியர்களின் வெட்டுப் போதிகைகள், சதுரத் தூண்கள், திருப்புல்லாணி, வாலாந்தரவை கல்வெட்டுகள் ஆகியவை மூலம் இப்பள்ளிதான் பிழார்பள்ளி என்பதை அறிய முடிகிறது. இங்கு நகரா என்ற ஒரு பெரிய இசைக்கருவியும் உள்ளது. இது தொழுகைக்கு மக்களை அழைக்க முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது என்றார்.