நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவில் 518வது ஆனித் தேரோட்டம் நாளை (21.06.24) நடைபெற உள்ளது. இந்த நிலையில் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பாதுகாப்பு ஏற்பாடுகள்:


பாதுகாப்பு பணிக்காக நெல்லை மாநகரம், வெளி மாவட்ட காவல்துறையினர் என 1500 பேர் நெல்லை மா நகர காவல் ஆணையர் தலைமையில் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் 147 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவிலின் உட்புறமும், வெளிப்புறமும் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் அசம்பாவித குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம்  அதனை தடுப்பதற்கு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி ஒலிப்பெருக்கி, எச்சரிக்கை பலகைகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நான்கு ரத வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைத்து குற்ற சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிக்கப்பட  உள்ளது. கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளில் 16 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. கூட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களையும், காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டிய ஏனைய விவரங்களையும் அம்மையங்களில் உள்ள காவலர்களிடம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக்குழு, நடமாடும் கழிப்பறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


போக்குவரத்து மாற்றம்: 


தேரோட்டத்தை முன்னிட்டு 20.06.24 அன்று மாலை 6 மணி முதல் 21.06.24 இரவு வரை நெல்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளைத் தவிர்த்து ஏனைய கனரக வாகனங்கள் எதுவும் நெல்லை டவுண் பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


1. புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குளம் மார்க்கமாக தென்காசிக்கு செல்லக்கூடிய பேருந்துகளும், பேட்டை வழியாக அம்பாசமுத்திரம் செல்லக்கூடிய பேருந்துகளும் இவ்வழிகளில் செல்லும் இலகுரக வாகனங்களும் வண்ணாரப்பேட்டை, ஸ்ரீபுரம், டவுண் ஆர்ச், நெல்லை கண்ணன் ரோடு, தெற்கு மவுண்ட் ரோடு, காட்சி மண்டபம், டிவிஎஸ் கார்னர் வழியாக செல்ல வேண்டும்.


2. செங்கோட்டை, குற்றாலத்திலிருந்து நெல்லைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கண்டியபேரி விலக்கு, இராமையன்பட்டி, சங்கரன்கோவில் ரோடு, தச்சநல்லூர் ரவுண்டானா, வண்ணாரப்பேட்டை பைபாஸ் வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.


3. சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து டவுண் நோக்கிச் செல்லும் நகரப்பேருந்துகள் ஸ்ரீபுரம், டவுண் ஆர்ச், நெல்லை கண்ணன் சாலை, தெற்கு மவுண்ட் ரோடு சென்றுவிட்டு மீண்டும் தொண்டர் சன்னதி, வடக்கு மவுண்ட் ரோடு வழியாக சந்திப்பு பேருந்து நிலையம் வர வேண்டும்.


4. சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து டவுண் நோக்கி வரும் நகர பேருந்துகள் அனைத்தும் 21.06.24 அன்று மதியம் 2 மணிக்கு மேல் மாநகராட்சி எதிரே உள்ள வர்த்தக மையத்திற்குள்  திருப்பி விடப்படும்.


 




வாகனங்கள் நிறுத்துமிடம்:


கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கீழ்க்கண்ட இடங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.


1. கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் அனைத்தும் கோவிலுக்கு அருகில் உள்ள போத்திஸ் கார் பார்கிங்கில் நிறுத்த வேண்டும்


2. நெல்லை சந்திப்பிலிருந்து திருவிழாவிற்கு வரக்கூடிய 4 சக்கர வாகனங்கள் அனைத்தும் நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் மைதானத்தில் நிறுத்தப்பட வேண்டும்.


3. நெல்லை சந்திப்பிலிருந்து திருவிழாவிற்கு வரக்கூடிய 2 சக்கர வாகனங்கள் அனைத்தும் டவுண் ஆர்ச் அருகில் உள்ள தாமரைகுளம் பார்க்கிங், பார்வதி ஷேச மஹால் எதிர்புறம் உள்ள காலியிடம், ரத்னா தியேட்டர் எதிரே உள்ல அரசு மேல் நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நிறுத்த வேண்டும்.


4. மேலப்பாளைய மார்க்கமாக வரும் பக்தர்களின் நான்கு, இரண்டு சக்கர வாகனங்கள் அனைத்தும் டிவிஎஸ் கார்னர் அருகில் உள்ள ரோஸ்மேரி பள்ளி, டவுண் சோனா கல்யாண மஹால் ஆகிய இடத்தில் நிறுத்த வேண்டும்,


5. காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் வாகனங்கள் போத்திஸ் ஸ்டோர் இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்


காவல்துறை எச்சரிக்கை:


கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் சாதி ரீதியிலான பனியன்கள், கயிறுகள், கொடிகள் முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது, சாதி தலைவர்கள் குறித்து எந்தவிதமான கோசங்களும் எழுப்பக்கூடாது. இதை மீறுபவர்கள் மீதும், அவர் சார்ந்துள்ள அமைப்பின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்


தேரோட்டத்தின் போது நான்குரத வீதிகளிலும், அதிக ஒலி எழுப்பும் ஊதல்களை விற்கவோ, பயன்படுத்தவோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.