மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய  நெல்லை மாவட்டத்தில் காட்டு விலங்குகளான கரடி, சிறுத்தை, யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுவதும் விளை நிலங்களை சேதப்படுத்துவதும் என தொடர் கதையாகி வரும் நிலையில் அதனை வனத்திற்குள் விரட்ட வனத்துறையினரும் தீவிர முயற்சிகள் மேற்கொள்வது உண்டு.  இருப்பினும் அவ்வப்போது ஊருக்குள் காட்டு விலங்கள் புகுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில்  நேற்று இரவு திருநெல்வேலி மாநகரப்பகுதியான ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் தாமிரபரணி நதிக்கரை பகுதியில் காட்டெருமை ஒன்று சுற்றி திரிந்துள்ளது.




தொடர்ந்து அங்கிருந்து மாநகரின் முக்கிய  சாலை பகுதியான வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் பாலம் அருகே, சமாதான புரம் சாலை என முக்கிய பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளது. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த அளவே காணப்பட்டது.  மேலும் மாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் காட்டெருமை சுற்றி திரிவதை பார்த்ததோடு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வனத்துறையினர்,  காவல்துறையினர் இணைந்து காட்டெருமையை பிடிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.






குறிப்பாக காலை ஆட்கள் நடமாட்டத்தை கண்ட காட்டெருமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே தாமிரபரணி ஆற்றை ஒட்டிய புதர் மண்டிய பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தொடர்ந்து அதனை பிடிக்கும் பணிகள் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் காட்டெருமை வந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நகர் பகுதியில் வீடுகள் அதிகம் நிறைந்த இடத்தில் காட்டெருமை வந்தது எப்படி என்பது குறித்தும் வனத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டெருமை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.