நெல்லை டவுணைச் சேர்ந்தவர் நெல்லை கண்ணன். பட்டிமன்ற பேச்சாளர் சொற்பொழிவாளர் இலக்கியவாதி அரசியல் பேச்சாளர் என நெல்லை கண்ணன் பண்முக திறமை கொண்டிருந்தார். காமராஜர், கருணாநிதி, கண்ணதாசன் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களுடன் நெருங்கி பழகியவர். இவர் தனது மேடைப்பேச்சுகளில் அதிரடியாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து பொது மேடையில் அவதூறு பேசியதாக கூறி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் நெல்லை உள்ளூர் வழக்காடு மொழியில் பேசும் இவரது பேச்சு பலரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.


காமராஜர் மீது அதிக பற்றும் பாசமும் கொண்டவர். எனவே அனைத்து மேடைகளிலும் காமராஜரை பற்றி பெருமையாக பேசுவார். குறுக்குத்துறை ரகசியங்கள் வடிவுடை காந்திமதியே போன்ற நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய குறுக்குத்துறை ரகசியங்கள் என்ற நூல் மிகவும் பிரபலமானது. நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை குறித்து அந்த நூலில் எழுதி இருப்பார். நெல்லை கண்ணன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த நெல்லை கண்ணனின் நினைவாக நெல்லை டவுண் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலையில் இணையும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணனின் பெயரை சூட்ட நெல்லை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முன்னதாக நெல்லை கண்ணனின் நினைவாக கோவில்பட்டியை சேர்ந்த கரிசல  இலக்கிய அமைப்பினர் தலைவர் ராஜகோபால் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் நெல்லை மாநகர மேயரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.




அதில், தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்ட இலக்கியவாதி நெல்லை கண்ணன் அவர்களின் பெயரை நெல்லை மாநகர சாலை அல்லது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அதனை அரசுக்கு அனுப்பி உரிய அனுமதி பெற்று தருவதாக மேயர் உறுதி அளித்து இருந்தார். அதன்படி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு தற்போது தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் நெல்லை மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தில் டவுண் குறுக்குத்துறை ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலையில் இணையும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என்று பெயரிட மாமன்றம் அனுமதி அளிக்கலாம் என்று கூறியுள்ளார். முதன்மைச் செயலாளரின் கடிதத்தை தொடர்ந்து நாளை நடைபெறும் நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேற்கண்ட சாலைக்கு நெல்லை கண்ணன் பெயரை சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதை கேள்விப்பட்டு நெல்லை கண்ணன் குடும்பத்தினர், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண