நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த  நிலையில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி அதற்கான அரசாணையையும் சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறுவோர் மீது புதிய சட்டத்தின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட அபராத தொகை வசூலித்து வசூலிக்கப்பட்டு வருகிறது.




இதற்கேற்றாற்போல அபராதம் வசூலிக்கும் கையடக்க கருவியில் உயர்த்தப்பட்ட கட்டணம் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக  வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகில் மாநகர போக்குவரத்து போலீசார் இன்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் செல்வது அதிக வேகத்தில் செல்வது, உள்பட சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து புதிய சட்டத்தின்படி 10 மடங்கு உயர்த்தப்பட்ட அபராத  தொகை வசூலிக்கப்பட்டது.  இதற்கு முன்பு தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் 100 ரூபாய் வசூல் செய்யப்பட்ட நிலையில்  நேற்று முதல் ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது.




அதேபோல ஓட்டுனர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய்க்கு பதில் ஐந்தாயிரம் ரூபாயும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி இரண்டாவது முறையாக சிக்கும் நபர்களிடம் 15 ஆயிரம் ரூபாயும், இன்சூரன்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய்க்கு பதில் ஐந்தாயிரம் ரூபாயும், அதிவேகமாக ஓட்டும் கனரக வாகன ஓட்டிகளிடம் நான்காயிரம் ரூபாய் என பத்து மடங்கு உயர்த்தப்பட்ட புதிய அபாரத தொகை வசூலிக்கப்பட்டது. ஏற்கனவே தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட அதிக செலவினத்தை தாக்கு பிடிக்க முடியாத ஏழை, எளிய மற்றும் நடுத்தர பொதுமக்கள் பண்டிகை முடிந்த கையோடு திடீரென பத்து மடங்கு அபராதம் வசூலித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாலை விபத்துக்களை தடுக்க விதிமுறைகளை கடுமையாக்குவது தவறில்லை என்றாலும், தரமற்ற சாலைகள், குண்டும் குழியுமாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத  நிலையில் இருக்கும் சாலைகளை சீரமைப்பதிலும் அரசு இந்த ஆர்வத்தை காட்டினால் விபத்துக்களை தடுக்க முடியும், எந்த ஒரு கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தாமல் சாமானிய மக்கள் மீது விதிக்கப்படும் அபராத தொகையால் பலரது குடும்பங்கள் பாதிக்கப்படும் என புலம்பிய படி செல்கின்றனர் வாகன ஓட்டிகள்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண